Published : 20 Jun 2025 04:47 AM
Last Updated : 20 Jun 2025 04:47 AM

தெருக்களில் சாதி பெயரை நீக்க ஆணையர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் சாதி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஆதிதிராவிடர் வசிக்கும் குடியிருப்புகள், தெருக்கள் ‘காலனி’ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ‘காலனி’ மற்றும் சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மாநகராட்சியைப் பொறுத்தவரை 677, நகராட்சியில் 455 என மொத்தம் 1,132 இடங்களில் காலனி மற்றும் சாதி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அப்பெயரை நீக்கி, பூக்கள், மரங்கள், இயற்கை, நில அமைப்பு அடிப்படையிலும், நகரின் முக்கியமான அடையாளங்கள் மற்றும் வரலாற்று அடிப்படையிலும், பொது தலைவர்களின் பெயரிலும் பெயர்களை வைக்க வேண்டும்.

பெயர்களை மாற்ற, மாநகராட்சி, நகராட்சிகளில் அந்தந்தப் பகுதியில், பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதனை அந்தந்த உள்ளாட்சி மன்றத்தில் வைத்து மாற்று பெயரினை சூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அந்தத் தெருவில் குடியிருக்கும் பெரும்பான்மை ஒப்புதல் பெறப்பட்டால் போதுமானது. இதனை நகராட்சி நிர்வாக இயக்குநர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x