தொலைத்​தொடர்பு துறை​யில் 120 ஆராய்ச்சி திட்​டங்​களுக்கு ரூ.500 கோடி: மத்திய அரசு அனு​மதி

மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் நீரஜ் மிட்டல் | கோப்புப் படம்
மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் நீரஜ் மிட்டல் | கோப்புப் படம்
Updated on
1 min read

தொலைத்தொடர்புத் துறை தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக 120 ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் நீரஜ் மிட்டல் தெரிவித்தார்.

மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் சென்னை ஐஐடி சார்பில் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் தொடர்பான 3 நாள் கருத்தரங்கம் தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று தொடங்கியது. இக்கருத்தரங்கை மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை செயலர் நீரஜ் மிட்டல் தொடங்கிவைத்து பேசியதாவது:

தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டமானது கடந்த 2022-ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்பு துறையால் கொண்டுவரப்பட்ட ஒரு முன்னோடி திட்டம் ஆகும். இது, தொலைத்தொடர்புத் துறையில் உள்நாட்டு ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிப்பதுடன் கல்வி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்), ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு பல்வேறு நிலைகளில் ஆதரவு அளித்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 120 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ரூ.500 கோடிக்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியா சார்ந்த 5ஜி தொழில்நுட்பம், ட்ரோன் சார்ந்த முக அடையாளம் காணும் தொழில்நுட்பம், குவாண்டம் சார்ந்த தொலைத்தொடர்பு முறை போன்றவை தொடர்பான ஆய்வுகள் முக்கியமானவை.

தொலைத்தொடர்புத் துறையின் ஆராய்ச்சி திட்டங்களில் கல்வி நிறுவனங்களும் தொழில்துறையினரும் கூட்டுசேர்ந்து செயல்பட வேண்டும். தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் தெரிவித்தால் அவற்றை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்க தொடக்கவிழாவில் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கூடுதல் செயலர் குல்சார் நடராஜன், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் துணை டைரக்டர் ஜெனரல் பராக் அகர்வால், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி, ஐஐடி பேராசிரியர் ஆர்.கே.காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in