Published : 19 Jun 2025 08:58 PM
Last Updated : 19 Jun 2025 08:58 PM

“முக்குலத்தோர் வாக்குகளை பெறவே மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு” - திருமாவளவன் குற்றச்சாட்டு

மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில்  நடந்த மனிதச் சங்கிலியில் திருமாவளவன், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் |  படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: “மதுரையை மையமாக வைத்து முக்குலத்தோர் வாக்குகளைப் பெறவும், அந்தச் சமுதாயத்தினரை வளைத்துப்போடும் நோக்கத்திலும் பாஜக, சங் பரிவார் அமைப்புகளால் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது,” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையின் மத நல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம், உலகத் தமிழ்ச் சங்கம் முன்பு இன்று (ஜூன் 19) நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திரைப்பட இயக்குநர் அமீர், மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் மனித சங்கிலி பிரகடனங்களை வெளியிட்டு வாசித்தார். பின்னர் அவர் பேசியது: “பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் வடமாநிலங்களில் கடவுள் ராமர் பெயரில் கலவரங்களை ஏற்படுத்தி மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியதுபோல், தமிழகத்தில் கடவுள் முருகன் பெயரில் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தமிழகம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் மண்.

எல்லா கட்சியிலும் முருகனை வழிபடுவோர் உள்ளனர். இங்கு மதங்களின் பெயரால் கடவுளின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முடியாது. இதன் மூலம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட திட்டமிடுகின்றனர். அந்த தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றனர். பாஜகவின் சூழ்ச்சியில் முருக பக்தர்கள் ஏமாந்துவிடக் கூடாது. மதநல்லிணக்கமான மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு சில நோக்கம் உள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது வடமாநிலங்களில் கலவரம் வெடித்தது. அப்போது தமிழகத்தின் மத நல்லிணக்கத்தால் அமைதி நிலவியது. அத்தகைய தமிழகத்தில், குறிப்பாக மதுரை மத நல்லிணக்கத்துக்கு பெயர் போன மண்ணில் இவர்கள் மாநாடு நடத்துகிறார்கள். சங் பரிவார் அமைப்புகள் மதுரையை தேர்வு செய்தது முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்குத்தான். தேர்தல் அரசியலில் பாஜகவுக்கு ஆதரவாக இந்து உணர்வுள்ளவர்களை எல்லாம் ஒன்று திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாியில் நாடார் சமூகத்தினரை வளைத்துப் போட்டுவிட்டோம். மதுரையை மையமாக வைத்து முக்குலத்தோர் சமுதாயத்தினரை வளைத்துப்போட வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். அதற்கு யாரும் இரையாக மாட்டார்கள் என்பதை சொல்வதற்குத்தான் இந்த மனிதச் சங்கிலி போராட்டம்.

சாதி அடிப்படையில் வேறுபாடுகள் முரண்பாடுகள் இருக்கலாம். மதத்தின் பெயரால் தமிழர்களை பிளவுபடுத்தும் முயற்சியை சங் பரிவார் அமைப்புகள் கைவிட வேண்டும். இல்லையேல் அவர்களது வால் ஒட்ட நறுக்கப்பட வேண்டும். இந்த மண்ணில் வன்முறை ஏற்படக்கூடாது என்ற பொறுப்புணர்வுடன் பேசுகிறோம். உங்களின் சூழ்ச்சியை தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளனர். மதத்தின் பெயரால் தமிழக மக்களை பிளவுபடுத்த முடியாது,” என்று அவர் பேசினார்.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன், வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன், தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x