சென்னையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் இயந்திரம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை முழுவதும் குடிநீர் வாரியம் சார்பில் ரூ.6.04 கோடி மதிப்பீட்டில் 50 கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர். இடம்: மெரினா நீச்சல் குளம் அருகில். | படம்: ம.பிரபு |
சென்னை முழுவதும் குடிநீர் வாரியம் சார்பில் ரூ.6.04 கோடி மதிப்பீட்டில் 50 கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர். இடம்: மெரினா நீச்சல் குளம் அருகில். | படம்: ம.பிரபு |
Updated on
1 min read

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.6.04 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களில், மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட இயந்திரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் (Water Dispensing Unit) நிறுவி பொதுமக்களுக்கு கட்டணமில்லா தரமான குடிநீர் வழங்க சென்னை குடிநீர் வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில், தேர்தெடுக்கப்பட்ட இடங்களான பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், கோயில்கள், அரசு மருத்துவமனைகள், வணிகப் பகுதிகள், ரயில் நிலையங்கள், பள்ளிக்கூடம், கல்லூரி வளாகம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் மெரினா கடற்கரை என 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் ரூ.6.04 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தானியங்கி இயந்திரங்களை 3 ஆண்டுகளுக்கு இயக்கி பராமரிப்பதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோக குழாயிலிருந்து 3 ஆயிரம் லிட்டர் முதல் 9 ஆயிரம் லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டேங்குகளில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, அல்ட்ரா வடிகட்டிகள், கார்பன் வடிகட்டிகள் மற்றும் புறஊதாக் கதிர் மூலம் சுத்திகரிக்கப்பட்டு துருப்பிடிக்காத டேங்குகளில் சேகரிக்கப்பட்டு தானியங்கி இயந்திரங்கள் மூலம் பொதுமக்கள் ஒரு லிட்டர் மற்றும் 150 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாதுகாப்பான குடிநீர் பெறும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளது.

தானியங்கி இயந்திரங்கள் அனைத்தும் நவீன ஐஓடி (Internet of Things) மூலம் இயக்குதல் மற்றும் பராமரிப்பு செயல் முறை இணைய அடிப்படையிலான செயலி மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் குடிநீர் அளவு குறையும் போது உடனடியாக பகுதி பொறியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவையான குடிநீர் நிரப்ப நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

திருட்டு மற்றும் சமூக விரோதிகள் மூலமாக குடிநீர் இயந்திரங்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க அனைத்து நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும். இதன்மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.

இந்த இயந்திரங்களின் பயன்பாட்டை நேற்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, தண்ணீரையும் அருந்தினார்.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in