அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை எளிதாக்கி அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை எளிதாக்கி அரசு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அரசு ஊழியர் நடத்தை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் ந.முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறவும், அதை புதுப்பிக்கவும் அடையாளச் சான்றிதழ் மற்றும் தடையின்மை சான்றிதழ் (என்ஓசி) பெறுவதில் இருந்துவரும் நடைமுறைகளை எளிமைப்படுத்த அரசின் எளிமை ஆளுமை திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக ஆய்வுக் குழுவும், அதிகாரக் குழுவும் அமைக்கப்பட்டன. அந்த குழுக்கள் அளித்த பரிந்துரைகளை ஏற்று அதுதொடர்பாக தமிழக அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973-ல் தேவையான திருத்தங்களைச் செய்து அரசு ஆணையிடுகிறது.

அதன்படி, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும் அதை புதுப்பிப்பதற்குமான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அடையாளச் சான்றிதழ், தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வழங்கும் நடைமுறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அல்லது அதை புதுப்பிக்கும்போது தங்கள் நிர்வாக தலைமைக்கு ஐஎஃப்எச்ஆர்எம்எஸ் செயலி வாயிலாக தகவல் தெரிவித்துவிட்டு நேரடியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து விடலாம். ஒருவேளை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூடுதல் விவரங்கள் தேவைப்படும் சூழலில் அவசரகால நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட நிர்வாக தலைமை அதிகாரியே என்ஓசி அல்லது அடையாளச் சான்றிதழ் அல்லது இரண்டையும் வழங்கலாம்.

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாக இருந்தால் என்ஓசி வாங்க வேண்டும். அரசு திட்டம் வாயிலாக புனித பயணம் மேற்கொள்வதாக இருந்தால் என்ஓசி பெற வேண்டியதில்லை. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in