கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட கோரி தி.க. ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம்
சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீழடி தொல்லியல் அகழாய்வு விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் அமைப்பின் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை, சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் துணைத் தலைவர் எம்.அப்துல் ரகுமான், மதிமுக கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக்குழு தலைவர் கே.வீ.தங்கபாலு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
அப்போது, கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசு உடனடியாக வெளியிடவேண்டும். தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
