Published : 26 Jul 2018 09:59 AM
Last Updated : 26 Jul 2018 09:59 AM

வெங்கய்ய நாயுடுவுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு: தமிழக காங்கிரஸார் கடும் அதிருப்தி

டெல்லியில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். எம்எல்ஏக்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு முடிந்ததும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை அவரது இல்லத்தில் திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு, தமிழக காங்கிரஸாரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், ‘‘வெங்கய்ய நாயுடு குடியரசு துணைத் தலைவராக இருந்தாலும் பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியையும் சோனியா, ராகுல் காந்தி ஆகியோரையும் மிகக் கடுமையாக எதிர்த்தவர். கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்து வருபவர். தற்போதுகூட மாநிலங் களவையில் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக இருந்து வருகிறார். எனவே, அவரை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான திருநாவுக்கரசர் சந்தித்திருப்பதை ஏற்கவே முடியாது. உணர்வுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் இதை ஏற்க மாட்டார்கள்’’ என்றார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவரிடம் கேட்டபோது, ‘’திருநாவுக்கரசர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ராகுல் காந்தி, அவரை தமிழக காங்கிரஸ் தலைவராக்கினார். ஆனால், அவரோ அதிமுக மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை. கட்சி வளர்ச்சியிலும் அக்கறை செலுத்தவில்லை. எனவே, கடந்த சில மாதங்களாக ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. தற்போதுகூட எம்எல்ஏக்களுடன் சென்றுதான் சந்திக்க முடிந்தது.

ஆனால், அன்றைய தினமே அவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்துள்ளார். வெங்கய்ய நாயுடு மூலம்தான் அவர் பாஜகவில் சேர்ந்தார். மத்திய இணை அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பதவி களையும் பெற்றார்.

எனவே, இந்தச் சந்திப்பை திருநாவுக்கரசர் தவிர்த்திருக்கலாம், இல்லையெனில் காங்கிரஸ் மாவட்டத் தலைவரை அழைத்துச் செல்லாமல் தனியாக சந்தித்திருக்கலாம். இதை ஒருபோதும் ஏற்க முடியாது’’ என்றார்.

வெங்கய்ய நாயுடு சந்திப்பை தொடர்ந்து திருநாவுக்கரசரின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோருக்கு புகார் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இதனால் தமிழக காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x