மாநில தகவல் ஆணையர்களாக வழக்கறிஞர்கள் இளம்பரிதி, நடேசன் நியமனம்

எம்​.நடேசன், வி.பி.ஆர்.இளம்​பரிதி
எம்​.நடேசன், வி.பி.ஆர்.இளம்​பரிதி
Updated on
1 min read

சென்னை: மாநில தகவல் ஆணையர்களாக வழக்கறிஞர்கள் வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல் ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில், தகவல் ஆணையராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் மற்றும் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காலம் கடந்த 2022 நவம்பர் மாதம் முடிவடைந்தது.

தொடர்ந்து, புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகில் அக்தரும், தகவல் ஆணையர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரைக்கண்ணன், வழக்கறிஞர் ஆர்.பிரியகுமார், ஓய்வுபெற்ற ஐசிஎல்எஸ் அதிகாரி கே.திருமலைமுத்து, பேராசிரியர் எம்.செல்வராஜ் ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றனர்.

தொடர்ந்து, மீதமுள்ள 2 தகவல் ஆணையர்கள் பதவியிடத்துக்கு தகுதியானவர்கள் தேர்வு நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தகுதியானவர்கள் பட்டியல் தயாரித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தகவல் ஆணையர்களாக வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கான பதவியேற்பு விழா அடுத்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், வி.பி.ஆர்.இளம்பரிதி, ராஜபாளையம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜனின் மகன் ஆவார். மேலும், தற்போது திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராக இளம்பரிதி உள்ளார். இவரும் மற்றொரு தகவல் ஆணையரான எம். நடேசனும் வழக்கறிஞர்கள்.

இவர் கர்நாடக நீதிமன்றங்களி்ல் திமுக சார்பில் ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் 65 வயது அல்லது 3 ஆண்டுகள் என இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள் என தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in