சுங்கச் சாவடிகளில் கொடி கட்டிய வாகனங்களுக்கு விலக்கு - உயர் நீதிமன்றம் அதிருப்தி

சுங்கச் சாவடிகளில் கொடி கட்டிய வாகனங்களுக்கு விலக்கு - உயர் நீதிமன்றம் அதிருப்தி
Updated on
1 min read

மதுரை: சுங்கச் சாவடிகளில் கொடி கட்டிய வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. அதே நேரம் கேள்வி கேட்கும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் சாலையில் மரம், செடிகளை நட்டுப் பராமரிப்பதில்லை. மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் வரையும், வாகன ஓட்டிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தும் வரையும் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இரு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்து சுங்கக் கட்டணம் வசூலிக்க விதித்த தடையை நீக்கியது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறை தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மனுதாரர் தரப்பில், கடந்த வாரம் இந்த தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு தஞ்சாவூர் நீதிபதி பலத்த காயம் அடைந்தார். அவருடன் காரில் பயணித்த நபர்கள் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், சுங்கச் சாவடிகளில் கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில்லை. வாகனங்களில் வரும் பொதுமக்களில் யாரேனும் சிறு கேள்வி கேட்டால் அவர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குகின்றனர்.

சுங்கக் கட்டணம் வசூலிக்கும் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குண்டு, குழிகளைச் சீரமைக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், வாகனங்களின் வேகங்களை நவீன முறையில் கண்காணிக்க வேண்டும், தொடர் சாலை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in