அற்ப காரணங்களுக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது: ஐகோர்ட் அறிவுரை

அற்ப காரணங்களுக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது: ஐகோர்ட் அறிவுரை
Updated on
1 min read

மதுரை: அற்பமான காரணங்கள், தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக வழக்கறிஞர்கள் அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பு நடத்துவது சட்ட விரோதமானது. சிலர் நீதிமன்றத்தையும், போலீஸாரையும் மிரட்டும் நோக்கத்தில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

காவல் நிலையங்களில் வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் போது சில நேரங்களில் அந்த வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர். அப்போது கட்டப்பஞ்சாயத்து வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தப்படுகிறது. நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் நீதிமன்ற புறக்கணிப்பு 90 சதவீதம் நியாயமற்ற காரணங்களுக்காக நடத்தப்படுகிறது.

இதுபோன்ற சட்டவிரோத நீதிமன்ற புறக்கணிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நீதிமன்ற புறக்கணிப்புகள் தொடர்கிறது. எனவே, நியாயமற்ற கோரிக்கைகளுக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், நீதிபதி ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “நீதிமன்ற புறக்கணிப்பு குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பலமுறை கண்டனத்தை பதிவு செய்துள்ளது. வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஒரு தீர்வாகாது. வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இதுவே சரியான முறையாகும்.

சட்டத் தொழில் ஓர் உன்னதமான தொழிலாகும். வழக்கறிஞர்கள் சாதாரண ஊழியர்கள் கிடையாது. வழக்கறிஞர்களின் நலனையும் நீதிமன்றங்களின் மகத்துவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள். எனவே, அற்பமான காரணங்கள் அல்லது வழக்கறிஞர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பு நடத்துவது எந்த சூழ்நிலையிலும் ஏற்கத்தக்கது அல்ல. பொதுவான காரணமாக இருந்தால் பார் கவுன்சிலை் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

அதை தவிர்த்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. வழக்கறிஞர்கள் தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள். அவர்கள் நீதி வழங்கும் அமைப்பின் பங்குதாரர்கள். அவர்கள் இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது நீதி வழங்கும் அமைப்பில் நீதிமன்றத்துக்கு அவர்களின் உதவி மிக முக்கியமானது. இந்த வழக்கில் நெல்லை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டு புகார் அளிக்கப்பட்டால் அது தொடர்பாக பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in