கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால் அதிமுக முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பும்: ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
Updated on
1 min read

சென்னை: “கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே, எடப்பாடி ஆட்சியில்தான். அது நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அதிமுகவின் குரலாகத் தான் இருக்கும்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடியில் அகழாய்வுப் பணியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே எடப்பாடியார் ஆட்சியில்தான். உண்மையை மறைத்து வாய்கிழிய கத்தும் திமுகவுக்கு கண்டனம்.

திமுக எப்படிப்பட்ட கேவலமான, அப்பட்டமான சாதி வெறி பிடித்த கட்சி என்பதை, தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கொண்டு நிற்கிறது. சாதிவெறி மனப்பான்மை, உருவக் கேலி இதெல்லாம் தான் திமுக கடைபிடிக்கும் `திராவிட’ கொள்கைகளா?. ஆனால், அதிமுக என்ற கட்சி தொடங்கப்பட்டதன் காரணமே சாதி பேதத்தை அகற்றுவதற்காகத்தான்.

எடப்பாடி எளிய மனிதர், ஒரு விவசாயி, தன் உழைப்பால் உயர்ந்து முதல்வராகி, இன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக, ஆளும் ஸ்டாலின் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் மிகக் கேவலமான, அவதூறான சாதிய வன்மத்தில், தனிமனித விமர்சனத்தில் இறங்கியுள்ளது திமுக. விவசாயிகளின் உழைப்பை, கஷ்டங்களை அறிந்தவர். வயல்வெளியில் வியர்வை சிந்தி விவசாயம் செய்தவர் தான் எங்கள் பொதுச் செயலாளர். அதில் எங்களுக்கு பெருமையும், கர்வமும் எப்போதும் உண்டு.

போட்ட சட்டையையே கிழித்துக்கொண்டு `ஐயோ, அம்மா’ என்று உங்கள் தலைவர் ஸ்டாலின் கதறிய காட்சிகளை கார்ட்டூனில் எல்லாம் வரைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அதெல்லாம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் கைகொட்டி சிரித்ததை யாரும் மறக்கவில்லை.

கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே, எடப்பாடி ஆட்சியில்தான்! வாய்கிழிய உண்மையை மறைத்து கத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுப் பணிக்கு ரூ. 55 லட்சம் ஒதுக்கி 18.4.2018 அன்று அகழாய்வுப் பணிகள் துவங்கப்பட்டு செப்டம்பர் 2018-ல் பணிகள் முடிக்கப்பட்டன. அதில், 34 அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு, 5820 அரிய வகை தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து உலகத் தரம் வாய்ந்த தள அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கப்பட்டது.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் இத்திட்டங்களை முன்னிருந்து செயல்படுத்திய அதிகாரி, இப்போதைய நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், ஐஏஎஸ்ஸிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். மத்திய அரசு கூடுதல் தரவுகளைக் கேட்டுள்ளது. அதை கீழடி ஆய்வாளர்கள் கொடுக்கத்தான் போகிறார்கள். அது ஒப்புதல் ஆகத்தான் போகிறது. கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரலாகத் தான் இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in