Published : 18 Jun 2025 01:09 PM
Last Updated : 18 Jun 2025 01:09 PM
மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை எப்படி அமையப் போகிறது என்பது பற்றிய 4 நிமிடங்கள் 3டி வீடியோ ஒன்றை, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் காண்பிக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துடன் அமைய உள்ள பிரம்மாண்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவனை கட்டிடமும், அங்குள்ள வசதிகளும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை அருகே தோப்பூரில் இந்திய அறிவியல் நிறுவனம் சார்பில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை 222 ஏக்கரில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடக்கின்றன. முதற்கட்ட கட்டுமானப் பணிகள் 2026-ம் ஆண்டும், 2-ம் கட்டப் பணிகள் 2027-ம் ஆண்டும் நிறைவுபெற உள்ளன. 900 படுக்கைகளுடன் அமையும் இந்த மருத்துவமனையில் ஹெலிபேடு, குறுங்காடு, பிரமாண்ட மருத்துவக் கட்டிடப் பிரிவுகள், விசாலமான சாலைகள், மேற்கூரையுடன் கூடிய கார் பார்க்கிங் போன்றவை அமைய இருக்கின்றன.
இந்த கட்டிடத்தின் மாதிரி வடிவத்தின் 3டி வீடியோவை மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் தங்களுடைய ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டது. 4 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் பிரம்மாண்டத்தை நமது கண்முன் நிறுத்துகிறது. வீடியோவின் தொடக்கத்தில், ஒரு ஹெலிகாப்டர் ‘எய்ம்ஸ்’ கட்டிடத்தின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் இறங்குகிறது. அதன் தொடர்ச்சியாக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வளாகத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி கட்டிடம், மாணவர்கள் தங்கும் விடுதி, கலையரங்கம், அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, செவிலியர்கள் கல்லூரி, நிர்வாக அலுவலகம், ஆயூஸ் மருத்துவமனை கட்டிடம், விளையாட்டு மைதான வளாகம், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் தங்கும் குடியிருப்பு என ஒவ்வொரு கட்டிடமாக காட்டப்பட்டுள்ளது.
மருத்துவமனை நுழைவு வாயிலில் இருந்து, பல்வேறு கட்டிடங்களுக்கு செல்வதற்கு விசாலமான சாலைகள், சாலைகளின் இருபுறமும் அலங்கார மரங்கள், நிழல் தரும் மரங்கள், செடிகள் என பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக தெரிகிறது. இதன் கட்டிட அமைப்பு இதுவரை எந்த மருத்துவமனைகளிலும் பார்த்திராத வகையில் தனியார் மருத்துவமனை கட்டிடங்களையும் விஞ்சும் வகையில் நவீனமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பாக வளாகத்தில் நடந்து செல்வதற்கு தனி நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட முகப்பின் முன் இந்திய தேசியக் கொடி பறக்கும் கொடிக்கம்பமும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு தளத்துக்கும் செல்ல எஸ்கலேட்டர் படிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர்களுக்கு விசாலமான வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டால் உடனடியாக மின்சாரம் வழங்க மிகப்பெரிய ஜெனரேட்டர் வளாகமும், சோலார் பேனர்களுடன் கூடிய சூரிய மின்சக்தி கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் கட்டிடத்தையும் இந்த 3 டி வீடியோவில் பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. வீடியோவில் உள்ளபடி கட்டடிட அமைப்பும், வசதிகளும் அமையும் பட்சத்தில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரைக்கு மட்டுமல்லாது தென் தமிழகத்தின் ஒரு அடையாளமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT