கள் இறக்கியதற்காக விசாரணையை சந்திக்க தயார்: சீமான் உறுதி

கள் இறக்கியதற்காக விசாரணையை சந்திக்க தயார்: சீமான் உறுதி
Updated on
1 min read

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் பனையேறி, கள் இறக்கியதற்காக விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸின் 139-வது பிறந்தநாள் விழா சென்னை எம்ஜிஆர் நகரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரா, கர்நாடகாவில் கள் இறக்க அனுமதி உண்டு. புதுச்சேரியில் கள் இறக்குகின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் அனுமதியில்லை.

தமிழர் வாழ்க்​கை​யில் இணைந்த.. பனையும் அதன் பாலும் தமிழர் வாழ்க்கையில் இணைந்த ஒன்று. பரம்பரை பரம்பரையாக இருந்து வந்திருக்கிறது. அது எப்படி போதைப்பொருள் ஆகும். பனையேறி, கள் இறக்கியதை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆதரித்திருக்கிறார். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கூட கள்ளை ஆதரித்து போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

ஏனென்றால் அவர்கள் ஆளும் மாநிலங்களில் கள் இறக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் நான்தான் ‘கள்’ளை கண்டுபிடித்தது போல பேசிக்கொண்டு இருக்கின்றனர். கள்ளு கடைகளை திறந்தால், டாஸ்மாக் கடைகள் கூட்டம் குறைந்துவிடும். இதைத்தவிர கள் இறக்க அனுமதிக்க மறுப்பதற்கு வேறு காரணமில்லை. இவர்கள் சாராயம் காய்ச்சி விற்கலாம். நாங்கள் கள் இறக்கி குடிக்கக்கூடாதா? எனவே பனையேறி, கள் இறக்கியதற்காக விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

அதேபோல் திருச்செந்தூரில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழ் கடவுள் முருகனுக்கு மாநாடு நடத்துகின்றனர். ஆனால் அதே முருகனுக்கு தமிழில் மந்திரம் சொல்வதில் என்ன பிரச்சினை? இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றாலும், மக்கள் செவிசாய்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in