பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - ஜி.கே.வாசன் கண்டனம்

ஜி.கே.வாசன் | கோப்புப்படம்
ஜி.கே.வாசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கொடுமையிலும் கொடுமை. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாலையில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் மது போதையில் இருந்த 4 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது மிகவும் வேதனைக்குரியது,” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போவது மிகவும் வருத்தத்துக்குரியது. இதற்கு காரணம் தமிழக அரசின் செயலற்ற ஆட்சியே. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கொடுமையிலும் கொடுமை. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாலையில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் மது போதையில் இருந்த 4 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது மிகவும் வேதனைக்குரியது. இந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்ட அனைவரையும் கண்டுபிடித்து, வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். இந்த குற்றச்செயலுக்கு அடித்தளம் டாஸ்மாக் மற்றும் போதைப்பொருட்கள் தான். அதாவது குடிப்பவர்கள் எந்த நேரத்திலும் டாஸ்மாக் கடைக்குச் செல்லலாம், எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கலாம், எந்த இடத்திலும் குடிக்கலாம் என்ற சுதந்திரம் தமிழ்நாட்டில் உள்ளது.

இதற்கு காரணம் தமிழக அரசின் அலட்சியப் போக்கு. இதன் அடிப்படையிலேயே பாலியல் தொந்தரவுகள் தொடர்கின்றன. மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனையே இனிமேல் யாருக்கும் வரக்கூடாது. தமிழக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உயர்தர சிகிச்சை அளித்து குணமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்கவும், சட்டம் ஒழுங்கை முறையாக சரியாக கடைபிடிக்கவும், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in