பெரியகுளம் | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் துணை முதல்வர் ஆய்வு

பெரியகுளம் | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் துணை முதல்வர் ஆய்வு

Published on

சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டம் பெரியகுளம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "பெரியகுளம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிக்கு சென்ற துணை முதல்வர், மாணவர்களிடம் அவர்களின் சொந்த ஊர், பெற்றோர் குறித்தும், அவர்கள் பயின்று வரும் வகுப்பு குறித்தும் கேட்டறிந்தார். படிப்போடு விளையாடுவதிலும் உள்ள ஆர்வம் குறித்தும், விளையாடுவதின் நன்மை குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் விவரப் பதிவேட்டினை பார்வையிட்டு துணை முதல்வர், உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் மாணவர்கள் படிப்பதற்காக வாங்கப்படும் தினசரி நாளிதழ்களை பார்வையிட்டு, மாணவர்கள் நாளிதழ்களை வாசிப்பதை ஊக்கப்படுத்த விடுதி காப்பாளருக்கு அறிவுருத்தினார். மேலும் விடுதியில் சிசிடிவி மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர் விடுதியில் சமையல் கூடத்தில் உணவு தயாரிக்க உள்ள வசதிகளை பார்வையிட்ட துணை முதல்வர், மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியாளரிடம் மாணவர்களுக்கு விருப்பமான உணவு குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்டுள்ள உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து, உணவு வகைகளை ருசி பார்த்தார். மேலும், விடுதியில் மாணவர்களுக்கான குளியல் அறை, கழிப்பறை ஆகியவை சுத்தமாக பராமரிக்கப் படுகின்றதா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராம கிருஷ்ணன், ஆ.மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், கூடுதல் செயலாளர் ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in