Published : 17 Jun 2025 08:21 AM
Last Updated : 17 Jun 2025 08:21 AM
முன்பு பாஜக-வில் இருந்த நடிகை கவுதமி 2021 சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருந்தார். ஆனால் அப்போது, அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ராஜபாளையத்தை தரவேண்டி இருந்ததால் கடைசி நேரத்தில் கவுதமிக்கு கைவிரித்துவிட்டது பாஜக தலைமை. கவுதமி பாஜக-வை விட்டு விலக இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில் இப்போது அதிமுக-வுக்கு வந்துவிட்ட கவுதமி, மீண்டும் ராஜபாளையத்துக்காக காய்நகர்த்த ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக நடிகை கவுதமியை பாஜக அறிவித்தது. அதற்காக தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாகவே ராஜபாளையத்தில் வீடு எடுத்து குடியேறிய கவுதமி, அங்கேயே தங்கி இருந்து களப்பணியில் கவனம் செலுத்தினார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வேட்பாளர் போல தொகுதி முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்து வந்தார்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடியும் முன்பாகவே, ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கவுதமியை ராஜபாளையம் தொகுதி வேட்பாளர் என அறிவித்ததால் பெருத்த நம்பிக்கையுடன் இருந்தார் கவுதமி. ஆனால், தொகுதி பங்கீட்டீன் போது ராஜபாளையத்தை ராஜேந்திர பாலாஜிக்காக எடுத்துக்கொண்டு விட்டது அதிமுக.
இதனால் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருந்த கவுதமி, கடந்த அக்டோபரில் பாஜக-வில் இருந்து விலகினார். அப்போது அவர் எழுதிய விலகல் கடிதத்தில், ‘2021 சட்டப்பேரவை தேர்தலில் ராஜபாளையம் தொகுதி பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட எனக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதை நம்பி ராஜபாளையம் தொகுதியில் பாஜக-வை வலுப்படுத்த 5 மாதங்கள் பணியாற்றினேன். ஆனால், உறுதியளித்தபடி எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை’ என ஆதங்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக-வில் இணைந்த கவுதமிக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, இம்முறை ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளராக களமிறங்க கவுதமி ஆயத்தமாகி வருவதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள், “ஆந்திராவை பூர்விகமாக கொண்ட கவுதமி, ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட ராஜூக்கள் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். அதனாலேயே அவரை ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக பாஜக நியமித்தது. கவுதமியும் ராஜூக்கள் சமூகத்து மக்களைச் சந்தித்துப் பேசி தனக்கான ஆதரவை திரட்டி வைத்திருந்தார். இத்தனை முன்னேற்பாடுகளை செய்து வைத்திருந்த நிலையில் தேர்தலில் வாய்ப்புக் கிடைக்காமல் போனதில் அவருக்கு பெரிய வருத்தமுண்டு.
அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ளவே அதிமுக-வில் இப்போது ராஜபாளையம் தொகுதிக்காக பேசி வருகிறார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொகுதி மாறப் போவதாகப் பேச்சு அடிபடுவதால் இம்முறை கவுதமிக்கு ராஜபாளையம் எப்படியும் கிடைத்துவிடும் என நம்புகிறோம்” என்கிறார்கள்.
விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளோ, “அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளரான கவுதமி, தமிழகம் முழுவதும் கட்சிக் கூட்டங்களில் பேசி வருகிறார். ஆனால், ராஜபாளையத்தில் நடந்த கூட்டங்களுக்கு மாவட்டச் செயலாளரான ராஜேந்திர பாலாஜி கவுதமியை அழைத்துவரவில்லை. கவுதமி மீண்டும் ராஜபாளையம் மக்களுக்கு பரிச்சயமாவதை ராஜேந்திர பாலாஜி விரும்புவதாகத் தெரியவில்லை.
இம்முறை, தான் சிவகாசி தொகுதிக்கு மாறினாலும் ராஜபாளையத்தை பாஜக-வுக்கு தள்ளிவிடும் முடிவில் இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அப்படி தொகுதி பாஜக கைக்கு போனால், பாஜக-வில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான கோபால்சாமி ராஜபாளையத்தில் போட்டியிட தயாராய் இருக்கிறார்” என்கிறார்கள். பாஜக டு அதிமுக வரவான கவுதமியா... அதிமுக டு பாஜக வரவான கோபால்சாமியா? இம்முறையும் ராஜபாளையத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடப் போவது யார் என்பது ராஜேந்திர பாலாஜியின் கையில் தான் இருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT