இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்: மதுரையில் இன்று இறுதி சடங்குகள்

நெல்லை சு.முத்து
நெல்லை சு.முத்து
Updated on
1 min read

திருநெல்வேலி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து (74) உடல்நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் நேற்று காலமானார்.

திருநெல்வேலியில் எம்.சுப்பிரமணிய பிள்ளை, எம்.சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு 1951-ம் ஆண்டு மே 10-ம் தேதி முத்து பிறந்தார். திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட அவர், தனது பெயருக்கு முன்னால், 'நெல்லை' என்று ஊர் பெயரை சேர்த்துக்கொண்டார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றினார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாமுடன் இணைந்து பணியாற்றிய அவர், அவருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய இவர், அறிவியல், குழந்தைகள் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு தலைப்புகளில் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும், அறிவியல் குறித்து 100-க்கும் மேற்பட்ட தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

'செவ்வாயின் வெப்பமும் நல்வாய்ப்பும்' என்ற புத்தகம், செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நவீன அறிவியல் சாத்தியக்கூறுகளைப் பற்றியது. அவரது 4 புத்தகங்கள் தமிழக அரசின் விருதைப் பெற்றன. அவரது 'விண்வெளி 2057' என்ற புத்தகம் 2000-ம் ஆண்டுக்கான கணிதம், வானியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகளில் சிறந்த புத்தகம் என்ற விருதைப் வென்றது.

மற்றொரு புத்தகமான 'அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு' 2004-ம் ஆண்டுக்கான குழந்தைகள் இலக்கியப் பிரிவில் சிறந்த புத்தகம் என்ற விருதைப் பெற்றது. ‘ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்' என்ற புத்தகம், 2005-ம் ஆண்டுக்கான வாழ்க்கை வரலாறு மற்றும் தனிப்பட்ட வரலாற்றுப் பிரிவுகளில் சிறந்த புத்தகம் என்ற விருதைப் வென்றது.

திருநெல்வேலி மட்டுமின்றி தமிழகம் மற்றும் கேரளத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்குகளில் பங்கேற்று மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள சமச்சீர் கல்வி புத்தகங்களில் இவரது படைப்புகள் பாடமாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. நாளிதழ்களில் அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இஸ்ரோவில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு திருவனந்தபுரத்தில் முத்து குடியேறினார். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மதுரையில் உள்ள தனது மகள் வீட்டில் சில ஆண்டுகள் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவினால் திருவனந்தபுரத்தில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு மதுரையில் இன்று நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in