

சென்னை: தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி கே.சுரேந்தர் இடமாறுதலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய கே.சுரேந்தரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதை ஏற்று, அவரை இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், நீதிபதி சுரேந்தருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்ற நீதிபதி சுரேந்தர் பேசும்போது, ‘‘பொதுவாக இடமாற்றம் என்பதும் ஒரு புதிய தொடக்கம்தான். தெலங்கானாவை தொடர்ந்து, பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியை தொடங்குவதில் மகிழ்ச்சி’’ என்றார். அவரை அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர்.
நீதிபதி சுரேந்தர் பதவியேற்றதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 16 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நீதிபதியாக பதவியேற்ற சுரேந்தர், இதுவரை 22,622 வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன முறைகேடு, தில்சுக் நகர் குண்டுவெடிப்பு ஆகிய வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.