Published : 16 Jun 2025 05:20 PM
Last Updated : 16 Jun 2025 05:20 PM

பூவை ஜெகன்மூர்த்திக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்; ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு

சென்னை: ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர்.

இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, இந்த சம்பவத்தில் காவல் துறை ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்புள்ளதாகவும் பணம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால், நீதிபதி குறிப்பிட்ட நேரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராகவில்லை. அதனால், வழக்கை 45 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். பிற்பகல் 3.30 மணிக்கு நீதிபதி முன்னால் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.

நீதிமன்றம் சரமாரி கேள்வி: அப்போது நீதிபதி, “நீங்கள் ஒரு சட்டப் பேரவை உறுப்பினர்தானே. உங்கள் சட்டப் பேரவை தொகுதி எதுவென்று நினைவிருக்கிறதா? அந்தத் தொகுதியில் நீங்கள் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள் என்று தெரியுமா? உங்களை மக்கள் பணிக்காகவே வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். கட்டப்பஞ்சாயத்து செய்யத் தேர்ந்தெடுக்கவில்லை. உங்களிடம் போலீஸார் விசாரணைக்கு வந்தால் அதற்கு ஒத்துழைக்க வேண்டியதுதானே. அதைவிடுத்து, நீங்கள் முன்ஜாமீன் கோருவதும், அதை அவசரமாக விசாரிக்க வலியுறுத்த நீதிபதி வீட்டை சுற்றிவருவதும் சரியான செயலா?

உங்களுடைய செயலால் நீதிபதி அஞ்சிவிடுவார் என நினைத்தீர்களா? ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் சாமானிய மக்களுக்கு முன் மாதிரியாக நடந்துகொள்ள வேண்டுமே தவிர இப்படி நடந்து கொள்ளக் கூடாது ” என்று கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார். மேலும் இந்த வழக்கில், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்கும்படியும், தேவைப்பட்டால் பூவை ஜெகன்மூர்த்தியை விசாரித்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x