பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர்.
பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர்.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

Published on

கோவை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பில்லூர் அணை நிரம்பியது. அணையின் உபரி நீர் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்றினை மையப்படுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான 10-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கேரளா மற்றும் நீலகிரி மலைக்காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக கொண்டுள்ள பில்லூர் அணையின் நீர்த்தேக்க அளவு 100 அடி ஆகும். 97.5 அடியை கடந்தால் பில்லூர் அணை நிரம்பியதாக கணக்கில் கொள்ளப்படும்.

இதைத்தொடர்ந்து 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். இந்நிலையில், கோவை மற்றும் நீலகிரிக்கு அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கேற்றார் போல், பில்லூர் அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று நிலவரப்படி 82 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்று அதிகாலை 95 அடியாக உயர்ந்தது.

தொடந்து பில்லூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அதிகாலை பில்லூர் அணையின் 4 மதகுகளும் திறக்கப்பட்டன. அதன் வாயிலாக பவானி ஆற்றில் விநாடிக்கு 14,000 கனஅடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நடப்பு பருவமழைக் காலத்தில் கடந்த மாதம் பில்லூர் அணை நிரம்பியது. தொடர்ந்து 2 வது முறையாக இன்று நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in