சென்னையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம்: தியாகராய நகரில் 26-ம் தேதி நடைபெறுகிறது

சென்னையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம்: தியாகராய நகரில் 26-ம் தேதி நடைபெறுகிறது
Updated on
1 min read

சென்னை: மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம் சென்னை தியாகராயநகரில் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தியாகராயநகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் வரும் ஜூன் 26-ம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான குறைதீர் மன்றத் தலைவர் விசாரிப்பார். இந்தக் கோட்டத்துக்கு உட்பட்ட தங்கள் புகார்களை வாடிக்கையாளர்கள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு ஜூன் 18-ம் தேதி அல்லது அதற்கு முன் அனுப்பலாம்.

பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர் தொடர்பான புகார்களை அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடனும், சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது ஊரக அஞ்சலக காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்பான புகார்களில், கணக்கு எண், பாலிசி எண் ஆகியவற்றுடன் புகார்தாரரின் முழு முகவரி, அஞ்சல் நிலையப் பெயர் போன்ற தகவல்களுடனும் அனுப்ப வேண்டும்.

கீழ்நிலை அஞ்சலகங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு மனநிறைவு தரும்வகையில் தீர்வு காணப்படாத புகார்கள் மட்டுமே, மண்டல அளவிலான குறைதீர் முகாமில் எடுத்துக்கொள்ளப்படும். புதிய புகார்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. புகார்களை சாதாரண தபாலிலோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்ப வேண்டும். புகார்கள் அடங்கிய உறையின் மேற்பகுதியில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் என குறிப்பிட வேண்டும்.

மேலும், தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய தலைமை அஞ்சல் அலுவலகங்கள், சூளைமேடு, ராயப்பேட்டை, கிரீம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, கோபாலபுரம்,

திருவல்லிக்கேணி, தியாகராயநகர் வடக்கு, தியாகராயநகர் தெற்கு, இந்தி பிரசார சபா, மந்தைவெளி, விவேகானந்தா கல்லூரி, சாஸ்திரிபவன், டிபிஐ வளாகம், தேனாம்பேட்டை மேற்கு, நுங்காம்பாக்கம் நெடுஞ்சாலை, லயோலா கல்லூரி, லாயிட்ஸ் எஸ்டேட் சேப்பாக்கம், சென்னை பல்கலைக்கழகம், பார்த்தசாரதி கோயில் ஆகிய அஞ்சல் அலுவலகங்கள், முதன்மை கண்காணிப்பாளர் பொது அஞ்சல் அலுவலகம், நுங்கம்பாக்கம் மண்டல வளர்ச்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் தொடர்பான புகார்களை dochennaicitycentral@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in