Published : 16 Jun 2025 09:59 AM
Last Updated : 16 Jun 2025 09:59 AM
மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டு அரங்கில் முருகனின் அறுபடை வீடுகளின் கண்காட்சி இன்று தொடங்குகிறது என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுக்க அவரை நேரில் சந்திக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு இதுவரை பதில் வரவில்லை.
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அரசும், போலீஸாரும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர். மாநாடு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பிருந்தே அறுபடை வீடுகளின் கண்காட்சியை நடத்த நினைத்திருந்தோம். அதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் நீதிமன்றம் சென்று அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து முருகனின் அறுபடை வீடுகளிலிருந்து பூஜை செய்யப்பட்ட வேல் கொண்டு வரப்பட்டு, அறுபடை வீடுகளில் அருள்பாலிக்கும் முருகனைப் போல் சிற்பம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியை இன்று மதுரை ஆதீனம், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். மாநாடு முடியும் வரை பொதுமக்கள் அறுபடை வீடுகள் கண்காட்சியைப் பார்வையிட அனுமதி வழங்கப்படும். ஜூன் 22-ம் தேதி மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாடப்படும்.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி, அமைச்சர் துரைமுருகன், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மடாதிபதிகள், ஆன்மிகப் பெரியவர்கள் என ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வது இன்னும் உறுதியாகவில்லை. கலைத் துறையைச் சேர்ந்த பலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். இந்துக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக அரசியல் சார்பு இல்லாமல் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.அனைத்து கட்சிகளும் எல்லா மதங்களையும் ஒன்றாகப் பாவிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT