சுகாதா​ரத்துறை அமைச்சர் மாற்றி பேசுகிறார்: சட்டப்போராட்ட குழு தலைவர் குற்றச்சாட்டு

சுகாதா​ரத்துறை அமைச்சர் மாற்றி பேசுகிறார்: சட்டப்போராட்ட குழு தலைவர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: அரசு மருத்துவர்கள் கோரிக்கை பாதயாத்திரை நடத்தும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றி மாற்றி பேசுவதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை தரும் விவகாரத்தில், கரோனா பேரிடரில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கி உள்ள நிலையில், மாநில அரசு நிவாரணம் தரவேண்டாம் என விதிமுறை உள்ளது.

அதேபோல், கரோனா தொற்றில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை தருவதற்கு, காத்திருப்போர் பட்டியல்படி தான் தர முடியும். பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், கருணை அடிப்படையில் வேலை என்பதில், இளநிலை உதவியாளர் பணிதான் தர முடியும். இருப்பினும் அது தனக்கு வேண்டாம் என தெரிவித்ததால் தான் இதுவரை தரவில்லை.

அரசு மருத்துவர்கள் மட்டுமே பாதயாத்திரை போராட்டம் நடத்துகின்றனர். இதை புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு பேச்சுவார்த்தையின் போது, திவ்யா விவேகானந்தனுக்கு அடுத்த வாரமே நிவாரணத்துக்கான காசோலையை வழங்க வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்ததை சிறப்பு நிகழ்வாக கருதி உடனடியாக அரசு வேலை தர வேண்டும். அதுவும் அவரது தகுதிக்கேற்ற அரசு வேலை தர வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளிடம் ஆவேசமாக பேசினார். ஆனால் தற்போது அமைச்சர் மாற்றி பேசுகிறார்.

பொதுவாக கருணை அடிப்படையில் அரசு வேலை என்பது பணியின்போது இயற்கை மரணம் அடையும் நிலையில், அவரது வாரிசுக்கு அரசு வேலை தருவது. ஆனால் இங்கு பணியால், அரசு மருத்துவர் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

அரசின் இத்தகைய மனப்போக்கு கரோனா பேரிடரின்போது, உயிரை பணயம் வைத்து பணியாற்றிய, ஒட்டுமொத்த மருத்துவர்களையும் வேதனைப்பட வைத்துள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்கவே பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in