

சென்னை: கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர், தேனியை சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்திய விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது.
போலீஸார் தடுத்து நிறுத்தம்: இந்த விவகாரத்தில் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்துவதற்காக, திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார், ஆண்டர்சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். இதையறிந்த அப்பகுதி மக்களும் புரட்சி பாரதம் கட்சியினரும் அவரது வீட்டு முன்பு திரண்டனர். அவர்கள், போலீஸாரை வீட்டுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் பரபரப்புக்குள்ளானது. 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சில போலீஸார் மட்டும் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒருமணி நேரம் சோதனை செய்த பிறகு, ஜெகன் மூர்த்தி இல்லாததை உறுதி செய்த போலீஸார் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது.
இதற்கு அனுமதி அளித்து, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். இதையடுத்து நீதிபதி வேல்முருகன் முன்பு ஜெகன்மூர்த்தி தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். ஆனால், நீதிபதி வேல்முருகன் இன்று வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.