

சென்னை: அண்ணாநகரில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் வரும் செப்டம்பரில் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, கனரக வாகனங்களுக்கு ரூ.60, கார்களுக்கு ரூ.40, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகரின் பல இடங்களில் சாலைகள் 60 சதவீதத்துக்கும் கூடுதலாக வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு வணிக நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்படுவதாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (CUMTA) தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கும்டா மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகரில் ஸ்மார்ட் வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அண்ணாநகர் தொகுதி எம்எல்ஏ எம்.கே.மோகன் தலைமையில் மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி துணை ஆணையர் ஜெ.பிரவீன் குமார், சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர் சி.கே.ரவி, கும்டா உறுப்பினர் செயலர் ஐ.ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக கும்டா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஸ்மார்ட் பார்க்கிங் திட்டப்படி அண்ணா நகரின் பிரதான சாலைகள், குடியிருப்பு சாலைகள் என 25 கி.மீ. நீளம் கொண்ட பகுதியில் 2 ஆயிரம் பார்க்கிங் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் கனரக சரக்கு வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.60, கார் உள்ளிட்ட இலகுரக 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.40, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 பார்க்கிங் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்பு சாலைகளில் நிறுத்தப்படும் கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.20, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் 100 பணியாளர்களுக்கும் உடலில் பொருத்திக் கொள்ளும் வகையில் கேமராக்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் கட்டணம் செலுத்தாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கட்டணம் செலுத்தாமலோ, அனுமதிக்கப்பட்ட கட்டண நேரம் கடந்த பின்பும் அகற்றப்படாமலோ நிற்கும் வாகனங்களின் சக்கரத்துக்கு 3 மணி நேரத்தில் பூட்டுப் போடப்படும். 6 மணி நேரத்துக்கு பிறகு அத்தகைய வாகனங்கள் காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்படும்.
பார்க்கிங் பகுதியை முன்கூட்டியே மொபைல் செயலி வழியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். காலியாக உள்ள பார்க்கிங் இடங்கள் பற்றி திரைகளில் ஒளிபரப்பாகும் அறிவிப்புகளைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். கட்டணம் வசூலிப்போரிடம் யுபிஐ மூலமாகவோ, ரொக்கமாகவோ, பார்க்கிங் செய்யும் முன்பே கட்டணம் செலுத்த வேண்டும்.
தனி நபர்களை ஏற்றிச் செல்லவோ இறக்கி விடவோ அண்ணா நகர் வரும் வாகனங்களுக்கு முதல் 10 நிமிடங்களுக்கு பார்க்கிங் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது, 10 நிமிடங்களை கடந்தும் ஒரே இடத்தில் நிற்கும் வாகனங்களுக்கே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
அண்ணா நகரில் குடியிருப்பு சாலைகளும் ஸ்மார்ட் பார்க்கிங் பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளதால் அபார்ட்மென்ட்களில் வாகன நிறுத்துமிடம் இல்லாதோர் கட்டணம் செலுத்தியே சாலையோரம் வாகனங்களை நிறுத்த முடியும். அவர்களுக்கு மாதாந்திர பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நள்ளிரவு 11 மணிமுதல் காலை 9 மணிவரை வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் இல்லை. அண்ணா நகரை தொடர்ந்து படிப்படியாக சென்னை முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அண்ணாநகர் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் வரும் செப்டம்பர் மாதம்முதல் அமலுக்கு வரவுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.