முருக பக்தர்கள் மாநாட்டை அரசியலுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை: ஆன்மிக மாநாட்டை அரசியலுக்குப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கினர்.
இதில் 6 நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரி இந்து முன்னணி சார்பிலும், அறுபடை வீடுகள் அமைக்கக் கூடாது என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பிலும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அவர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பின்படி ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது. அதேநேரத்தில், மதவாதம் மற்றும் நல்லிணக்கத்தை பாதிப்பதாக இருந்தால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
இந்த மாநாடு அரசியலுக்காக நடத்தப்படுகிறது என்று இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத அமைப்புகளை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் மதத்தை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
மாநாட்டுக்கு வரும் வாகனத்துக்கு பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் வழங்க வேண்டும். இரு ட்ரோன்கள் பறக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அறநிலையத் துறை, மாநகராட்சியிடம் அனுமதி பெறத் தேவையில்லை. மாநாடு நடைபெறும் இடத்தில் ஏற்கெனவே பல கட்சிகளின் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.
மத நல்லிணக்கம்... இந்த மாநாட்டால் மத நல்லிணக்கம் சீர்குலைய வாய்ப்பு இருப்பதாக அரசுத் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் சிலரின் பேச்சுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே, இந்த மாநாட்டில் மத நல்லிணக்கம் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
