முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45,041 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்ட அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி.
ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்ட அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி.
Updated on
1 min read

தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களின் முதல் போக பாசனத்திற்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் இன்று (ஜூன் 15) தண்ணீரை திறந்து வைத்தனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கியதால் வைகை அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரத்துவங்கியது. அணையின் மொத்தம் நீர்மட்டம் 71 அடியாக உள்ளநிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 60 அடியை கடந்துள்ளது. இதையடுத்து பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற தமிழ்நாடு நீர்வளத்துறை ஜூன் 15 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு அணையின் நீர் இருப்பைப் பொறுத்து 6,739 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது.

அதன்படி வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் இன்று வைகை அணையில் நடந்த நிகழ்ச்சியில் மதகை திறந்து வைத்து தண்ணீரில் மலர் தூவினர். அணையின் பிரதான 7 பெரிய மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறியது. தொடர்ந்து 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், அதற்கடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்து திறக்கப்படும் நீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, மதுரை மாவட்டம், வடக்கு மற்றும் வாடிப்பட்டி ஆகிய தாலுகாக்கள் என பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அணையில் நீர் திறக்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர்கள் சங்கீதா(மதுரை), சரவணன்(திண்டுக்கல்), ரஞ்சித்சிங் (தேனி),தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் மற்றும் எம்எல்ஏ.,க்கள் கலந்துகொண்டனர்.

ஜூன் 15 காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 61.22 அடியாகவும், நீரிருப்பு 3,841 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர்வரத்து 1,230 கன அடியாக உள்ள நிலையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in