Last Updated : 15 Jun, 2025 03:39 PM

3  

Published : 15 Jun 2025 03:39 PM
Last Updated : 15 Jun 2025 03:39 PM

‘நீங்கள் சொல்வதை செய்கிறேன்’ - ராமதாஸிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி வாக்குறுதி

ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.

திருவள்ளூர்: “என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள். ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக அதை நிறைவேற்றுவேன். நீங்கள் வருத்தப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள். நீங்கள் இன்று தேசிய தலைவர். கடந்த ஆண்டு பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில், உங்களை இந்தியாவின் மூத்த தலைவர் என்று சொன்னார்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், மணவாளர் நகர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக் கூட்டம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கட்சியை ராமதாஸ் தொடங்கி நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். சமூகநீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி பாமக. நமது பயணம், கரடு முரடான பாதைகளை கடந்துவந்த கடுமையான பயணம். நம் கட்சியை தொடங்கிய நோக்கமே நமக்கு ஆட்சி அதிகாரம் வரவேண்டும் என்பதற்காகத்தான். அப்போதுதான் தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பு வன்னியர் சங்கத்தை தொடங்கி சமூக நீதிக்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார். அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. அதன்பின்னர்தான் பாமகவை தொடங்கினார். சமூக நீதி, சமத்துவம், சாதி ஒழிப்பு என திமுகவினர் முற்போக்கு பேசுவார்கள். ஆனால் அதனை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். திமுகவை சமூக நீதியின் துரோகியாக நான் பார்க்கிறேன். சமூக நீதி பற்றி பேச தகுதியற்றவர்கள் முதல்வர் ஸ்டாலினும், திமுகவும்தான்.

தமிழகத்தை ஆளும் கட்சி திமுக. மக்களவையில் 40 பேர் திமுக கூட்டணியினர் உள்ளனர், மாநிலங்களவையில் 12 பேர் திமுகவில் உள்ளனர். இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு திமுக சமூக நீதிக்காக செய்தது என்ன?. சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்புக்காக நாங்கள் திமுகவிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் இதனை திமுக அரசு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே இதனை மக்களிடம் மிகப்பெரிய பிரச்சாரமாக முன்னெடுக்க வேண்டும்.

நாம் நமது கட்சியை வலுப்படுத்த வேண்டும். வருகின்ற 2026ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும். அடுத்தவர்களை ஆட்சிக்கு கொண்டுவர நாம் கட்சியை நடத்தவில்லை. நாம் ஆட்சிக்கு வரவேண்டும். நாம் அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் சமூக நீதி நிலைநிறுத்தப்படும். எனவே ஜூலை 24ம் தேதி ராமதாஸ் பிறந்தநாளில் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணம் தொடங்கவுள்ளேன். 100 நாட்கள் தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்கவுள்ளேன். திமுக ஆட்சிக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது.

இன்று உலக தந்தையர் தினம். எனவே மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அவர் நீண்ட ஆயுளோடு 100 ஆண்டுகளுக்கு மேல், நல்ல ஆயுளோடு, மன நிம்மதியோடு, உடல் நலத்தோடு, மகிழ்ச்சியோடு வாழவேண்டும். ஒரு மகனாக அது என்னுடைய கடமையும் கூட. உங்களுக்கு என்மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்ல உடல் நலத்தோடு வாழவேண்டும்.

அவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு சுகர், பிபி எல்லாமே உள்ளது. எனவே நீங்கள் நல்ல உடல் நலத்தோடு இருக்கவேண்டும். நான் என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள். ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக அதை நிறைவேற்றுவேன். நீங்கள் வருத்தப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள். ஏனென்றால் இது நீங்கள் உருவாக்கிய கட்சி. உங்கள் கனவுகளை நனவாக்குவோம். நீங்கள் இன்று தேசிய தலைவர். கடந்த ஆண்டு பாரத பிரதமர் மோடி, உங்களை இந்தியாவின் மூத்த தலைவர் என்று சொன்னார். அந்த மதிப்பு எங்கள் அனைவருக்கும் உள்ளது’ என்று தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை, அன்புமணி தனது எக்ஸ் பக்க பதிவில், “தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்.
ஆக்குதல் அன்னையரின் பணி என்றால்,
அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி.
தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா
நாளும் தந்தையரை வணங்குவோம்!
” என உலக தந்தையர் தினத்தை ஒட்டி பதிவிட்டிருந்தார். அதன் பின்னர் சில மணி நேரங்களில் பகிரங்க மன்னிப்பும் கேட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x