குடியரசு துணைத் தலைவர் புதுச்சேரி வருகை: ஆளுநர், முதல்வர் வரவேற்பு

குடியரசு துணைத் தலைவர் புதுச்சேரி வருகை: ஆளுநர், முதல்வர் வரவேற்பு
Updated on
1 min read

புதுச்சேரி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், புதுச்சேரிக்கு 3 நாள் அரசு பயணமாக இன்று (ஞாயிற்றுக் கிழமை) மதியம் வந்தடைந்தார். அவரை ஆளுநர், முதல்வர் வரவேற்றனர்.

டெல்லியில் இருந்து புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு இன்று மதியம் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வந்தடைந்தார். அவரை துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

சுற்றுப்பயணம் வந்துள்ள ஜெகதீப் தன்கர், கடற்கரைச் சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை” என்ற நிகழ்ச்சி நாளை மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, உரையாற்றுகிறார். தொடர்ந்து ஜிப்மர் ஆசிரியர், ஊழியர், மாணவர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்வின் போது, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட, ‘தாயாரின் பெயரில் ஒரு மரக்கன்று’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது தாயார் கேசரி தேவியின் பெயரில் மரக்கன்று ஒன்றை நட உள்ளார். இந்நிகழ்வுக்குப் பிறகு, குடியரசு துணைத் தலைவர் விருந்தினர் மாளிகை திரும்புகிறார்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் புதுச்சேரி விமான நிலையம் வந்து ஹெலிகாப்டரில் சென்னை சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார். குடியரசு துணைத் தலைவர் வருகையால் புதுச்சேரி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in