மாநிலங்களவை எம்.பி ஆகியுள்ள நிலையில் கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

படம்: ம.பிரபு
படம்: ம.பிரபு
Updated on
1 min read

மாநிலங்களவை எம்.பி ஆகியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

மநீம தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேரவுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கமல்ஹாசன் நேற்று காலை வருகை தந்தார். அவருக்கு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்தித்தார். நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், புதுச்சேரி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவுறுத்தியிருந்தபடி, பெரும்பாலான நிர்வாகிகள் பூங்கொத்து, பொன்னாடைக்குப் பதில் புத்தகங்களைப் பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையே ஒரு நிர்வாகி கமல்ஹாசனுக்கு வீரவாளை நினைவுப்பரிசாக கொடுக்க முயன்றார். அதை வாங்க மறுத்த கமல்ஹாசன், ‘ஆயுதம் கையில் இருக்கக்கூடாது அது கீழேதான் இருக்க வேண்டும்’ என்று கண்டிப்புடன் சொன்னார். அதைத்தொடர்ந்து அந்த வாள் தரையில் வைக்கப்பட்டது.

இந்த சந்திப்பு நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, பொதுச் செயலாளர் ஆ. அருணாச் சலம், இளைஞர் அணி செயலாளர் கவிஞர் சினேகன், ஊடகப்பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in