Published : 15 Jun 2025 12:00 AM
Last Updated : 15 Jun 2025 12:00 AM
உலகிலேயே பழமையான, உயிருள்ள மொழி தமிழ் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம் சூட்டினார்.
ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற ஆளுநரின் 'எண்ணித் துணிக' என்ற தொடர் நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்மொழி மிகவும் பழமையான உயிருள்ள மொழி, இலக்கிய செழுமைமிக்கது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படும் மொழி. உலகிலேயே மிகவும் உன்னதமான மொழி என்று சொல்வதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது தமிழ் மொழி. அந்த வகையில், தமிழ் மொழியை தன்னகத்தை கொண்டுள்ள பாரதம் மிகவும் பெருமைப்படுகிறது.
இவ்வளவு பழையும் செழுமையும் மிக்க தமிழ் மொழி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனிக்காகவும், ஆங்கிலேய அரசு நிர்வாகத்துக்காவும் வேலைவாய்ப்பு நோக்கில் ஆங்கில கல்வி முறையை அறிமுகப்படுத்தினர். நம்மை தாழ்வுமனப்பான்மை மிக்கவர்களாக மாற்ற விரும்பிய அவர்கள் கல்விமுறையை ஒரு கருவியாக தேர்வுசெய்தனர்.
அதன்மூலம் தாங்கள் விரும்பியவற்றை எல்லாம் நமக்கு கற்றுக்கொடுத்தனர். அவர்கள்தான் மேலானவர்கள் என்றும் அவர்கள் இலக்கியங்கள்தான் மேலானவை என்றும் கற்பித்தனர். தமிழ்மொழியை அடிமைகளின் மொழி என்றனர். ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் அடைந்த பின்னரும் இன்னும் ஆங்கில மோகம் தொடர்கிறது. பிற மொழிகளை கற்கும்போது அவை நம்மொழிகளைவிட மேலானவை என்று கருதுவது விரும்பத்தக்கதல்ல. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில ஆங்கில வழிக்கல்வி உகந்தது என்று ஆங்கிலேயர்கள் பிரச்சாரம் செய்தனர். பழமையும் செழுமையும் உள்ள நமது தாய்மொழியில் அறிவியலையும் தொழில்நுட்பத்தையம் படிக்காமல் ஆங்கில மொழியில்தான் படிக்க வேண்டுமா என்பதுதான் எனது கேள்வி. காலனியாதிக்கத்தின் எச்சம் இன்றும் தொடர்கிறது.
பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க நமது நாகரீகத்தையும் மேற்கத்திய நாகரீகத்தையும் ஒப்பிடக் கூடாது. 2 ஆயிரம் ஆண்டு பழைமையான நமது இலக்கிய படைப்புகளுடன் சில நூறு ஆண்டுகள் பழமையான வெளிநாட்டு படைப்புகளுடன் எப்பிட ஒப்பிட இயலும். வெளிநாட்டினருடன் நம்மை ஒப்பிட்டு பார்க்கும் மனோபாவம் முதலில் மாற வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
முன்னதாக, டெல்லி கலை இலக்கிய பேரவையின் தலைவர் பொன் சங்கரபாண்டியன், செந்தமிழ் சொல்வேந்தர் பேரவையின் தலைவர் பி.பாலமுருகன் ஆகியோர் வரவேற்றனர். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து தமிழறிஞர்களை ஆளுநர் கவுரவித்தார். மலேசியா, சிங்கப்பூர், கத்தார், பக்ரைன், குவைத், சவுதி அரேபியா உட்பட 15 நாடுகளில் இருந்தும் தமிழறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு முன்பாக, ஆளுநர் மாளிகை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'கம்பர் வனம்' பூங்காவை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்து பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT