ஊழலற்ற ஆட்சி உலகில் எங்கும் கிடையாது: திருமாவளவன் கருத்து

ஊழலற்ற ஆட்சி உலகில் எங்கும் கிடையாது: திருமாவளவன் கருத்து
Updated on
1 min read

திருச்சி: உலகில் ஊழலற்ற ஆட்சி என்பது எங்கும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும். ஆனால், அதைவிட மதவாதம், சாதியவாதம் தீங்கானது. அதைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், மத்திய அரசு சிறுபான்மையினர் விரோதப் போக்குடன் நடந்து கொள்வதாகக் கூறியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் இன்று (ஜூன் 14) மாலை பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வந்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து அரசியலமைப்பு சட்டத்துக்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராகவே செயல்படுகிறது. அதைக் கண்டித்து திருச்சியில் நாளை (இன்று) பேரணி நடைபெறுகிறது. கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பைக் கட்டவிழ்த்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். இந்த சூழலில்தான் தமிழகத்தைக் காக்கவும், அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் பேரணி நடத்துகிறோம். அனைத்து ஜனநாயக சக்திகளும் இப்பேரணியில் பங்கேற்க வேண்டும்.

திமுக கூட்டணியில் இந்த முறை அதிக இடங்களை கேட்போம். கட்சி நலன் முக்கியமானது; அதைவிட கூட்டணி நலன் முதன்மையானது. எனவே, எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு, தேர்தல் நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம்.

கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால் 2026 தேர்தல் அதற்கான காலம் அல்ல. திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது தவறானது. திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

2026-ல் பாஜக ஆட்சி அமையும் என்று கூறி, கூட்டணியை சிதைக்கப் அண்ணாமலை. தான் இல்லாமல் பாஜக-அதிமுக கூட்டணி அமைந்ததையும், வேறு கட்சிகளை அவர்கள் கூட்டணியில் சேர்ப்பதையும் அண்ணாமலை விரும்பவில்லை.

உலகில் ஊழலற்ற ஆட்சி என்பது எங்கும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும். அதைக் கூறி ஒரு ஆட்சியை வீழ்த்த முடியாது. ஊழல் மிகப் பெரிய பிரச்சினைதான். அதைவிட மதவாதம், சாதியவாதம் தீங்கானது. அதைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in