Published : 14 Jun 2025 05:36 AM
Last Updated : 14 Jun 2025 05:36 AM
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய வழக்கில், மு.க.அழகிரி மகனின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது 2012-ல் கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கையை போலீஸார் 2018-ல் தாக்கல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக, துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனி வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறது.
பின்னர், துரை தயாநிதிக்கு சொந்தமாக மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத்தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கத் துறை உத்தரவிட்டது.
மன ரீதியான பிரச்சினை: இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி துரை தயாநிதி சார்பில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சண்முகவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. துரை தயாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துரை தயாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மனரீதியான பிரச்சினைகள் இருப்பதால் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அமலாக்கத் துறை வழக்கறிஞர், துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி, அவரது மனநிலையை உறுதி செய்யவேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்த முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி, விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT