தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நிறைவு: விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்கு புறப்படுகின்றனர்

மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் விசைபடகுகள் மூலம் ஆழ்கடலுக்கு செல்ல காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |
மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் விசைபடகுகள் மூலம் ஆழ்கடலுக்கு செல்ல காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |
Updated on
1 min read

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு கடலுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

கடலில் மீன் வளத்தைப் பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வங்கக் கடலில், நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அந்த வகையில் மேற்கு கடற்கரையில், அரபிக் கடல் பகுதியில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால், விசைப்படகு மீனவர்கள் ஏப்.15-ம் தேதி முதல் கடலுக்குச் செல்லவில்லை.

மீன்பிடி தடை காலத்தில், கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநில கடலோரப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள், சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்த 2 மாத காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் இன்று (ஜூன் 14) இரவுடன் நிறைவடையும் நிலையில், நேற்று மாலையிலிருந்தே சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி, கரைக்கால், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

இன்று நள்ளிரவு இவர்கள் கடலுக்கு செல்ல உள்ளனர். இதனால் வரும் நாட்களில் மீன்கள் விலை குறைவதுடன், பல்வேறு ரக மீன்களும் கிடைக்கும் என மீன் பிரியர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, மீனவர்கள் கடலுக்கு செல்ல இருப்பதையொட்டி, ‘‘18 வயது நிறைவடைந்தவர்களை மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க அழைத்துச் செல்ல வேண்டும். இந்திய கடல் எல்லையைத் தாண்டி சென்று மீன்பிடிக்கக் கூடாது. மீனவர் அடையாள அட்டை, படகு பதிவு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை உடன் வைத்திருக்க வேண்டும். உயிர் காப்பு உபகரணங்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்" என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in