Published : 13 Jun 2025 06:43 PM
Last Updated : 13 Jun 2025 06:43 PM

மதுரையில் 38 மாநகராட்சி பள்ளி மாணவர்களை நூலகத்துடன் இணைக்கும் திட்டம் தொடக்கம்

மதுரை: மாணவர்களிடம் பள்ளி பருவத்திலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதோடு கல்வி, இலக்கியத்தை தூண்டும் வகையில் மதுரை கலைஞர் நூலகத்தின் அனைத்து வகை புத்தகங்களை 38 மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் படிக்கும் வகையில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மதுரை புது நத்தம் சாலையில் தமிழக அரசு பிரம்மாண்டமான கலைஞர் நூலகத்தை கட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பொதுமக்கள், மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நூலகத்தை, இதுவரை 18 லட்சத்து 50 பேர் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நூலகத்தில் உள்ள அனைத்து வகை புத்தங்களையும் அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக பயன்படுத்துவதற்கு கலைஞர் நூலகம் கல்வி நிறுவனங்கள் உறுப்பினராக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் 38 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை உறுப்பினர்களாக இணைத்து, இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை பள்ளியில் இருந்தபடியே கலைஞர் நூலகத்தில் புத்தங்களை எடுத்து படிப்பதற்கான ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ போடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து கலைஞர் நூலகம் அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் அடிப்படையில் ஒவ்வொரு மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளும் கலைஞர் நூலகத்திற்கு வராமலேயே, பள்ளியில் இருந்துகொண்டே தலைமை ஆசிரியர் மூலம் 25 புத்தகங்கள் எடுத்துக் கொள்ளலாம். அந்த புத்தகங்களை சுழற்சி முறையில் மாணவர்கள் படித்துவிட்டு, அந்த புத்தங்களை நூலகத்தில் ஒப்படைத்துவிட்டு மீண்டும் புத்தங்களையும் எடுத்து படிக்கலாம்.

இந்த அடிப்படையில் கலைஞர் நூலகத்தில் உள்ள கல்வி, அறிவியல், வரலாறு, இலக்கியம், சமூகம் உள்ளிட்ட அனைத்து வகை புத்தங்களையும் இலவசமாக எடுத்து படிக்கலாம். மேலும், படித்த புத்தங்களை பற்றி, கலைஞர் நூலகத்தில் நடக்கும் நூல் வாசிப்பு நிகழ்ச்சியில் விமர்சனம் செய்யலாம். படித்த புத்தகங்களில் உள்ள கதைகளை சொல்ல ஆசைப்படுகிறேன் என்றால் கலைஞர் நூலகத்தில் வாசகர்கள் நிகழ்ச்சியில் சொல்லலாம்.

மாநகராட்சி பள்ளிகளில் ப்ளஸ்-1, ப்ளஸ்-2 மாணவர்கள், கலைஞர் நூலகத்தின் இ-நூலகத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், இ-நூலகம் பற்றியும் சொல்லிக் கொடுப்போம். இ-நூலகத்தில் ஆன்லைனில் புத்தகங்களை எப்படி தேர்வு செய்து படிக்கலாம் என்பதையும் சொல்லிக் கொடுப்போம்.

திறமையான மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை, அவர்களுடைய வாசிப்பு, பேச்சு, நாடகம் மற்றும் நடனம் போன்ற திறமைகளையும் கலைஞர் நூலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்த வைப்போம். கலைஞர் நூலகத்தில் நடக்கிற எல்லா நிகழ்ச்சிகளிலும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த, நூலகத்தை முழுமையாக மாணவர்களை பயன்படுத்த வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x