Published : 13 Jun 2025 03:45 PM
Last Updated : 13 Jun 2025 03:45 PM
திருச்சி: “திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம். கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால், வரும் 2026 தேர்தல் என்பது அதற்கான காலம் அல்ல” என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
இது குறித்து அவர் இன்று (ஜூன் 13) திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது: “விசிக சார்பில் நாளை மாலை திருச்சியில் ‘மதச்சார்பின்மையை காப்போம்’ என்கிற மையக்கருத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது. இன்றைய அரசியல் சூழலில் மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்கு அறைகூவல் விடுக்கும் பேரணியாக அமையும். மதச்சார்பின்மைக்கு எதிரான தாக்குதலை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. அதன் உத்திகளில் ஒன்றுதான் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வெறுப்பை பரப்பும் செயல். பாஜக அரசு திட்டமிட்டு வெறுப்பு அரசியலை ஆட்சி அதிகாரம் மூலம் பரப்புகிறது.
பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து அரசியலமைப்பு சட்டத்துக்கும், அதன் உயிர் மூச்சான மதச்சார்பின்மைக்கும் எதிராக செயல்படுகிறது. அவற்றை காக்க இந்த பேரணி. கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை கட்டவிழ்த்து அதன் மூலம் பாஜகவினர் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். தற்போது தமிழ்நாட்டிலும் அதற்கான முயற்சியை செய்து வருகிறார்கள்.
கடவுள் நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இந்தச் சூழலில் தான் தமிழ்நாட்டை காக்கவும், அரசியலமைப்பையும், மதச்சார்பின்மையை காக்கவும் பேரணி நடத்துகிறோம். கட்சி சார்பற்ற முறையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் இப்பேரணியில் பங்கேற்க வேண்டும். மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள் இந்தியா கூட்டணியிலும், மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள் பாஜக தலைமையிலும் அணி சேர்ந்துள்ளார்கள். தேர்தலை மையப்படுத்தி முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறது பாஜக.
அகமதாப்பாத்தில் நடந்த விமான விபத்து இந்திய அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.
திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம். தேர்தலில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. அதிக எதிர்ப்பார்ப்புகள் உண்டு. கட்சி நலன் முக்கியமானது. அதை விட கூட்டணி நலன் முதன்மையானது. எனவே, எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம். கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால், வரும் 2026 தேர்தல் அதற்கான காலம் அல்ல.
திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது மாயத் தோற்றம். திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பார்க்கிறார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் உறுதியாக இருக்கிறோம். 2026-ல் பாஜக ஆட்சி என கூறும் அண்ணாமலை, பாஜக கூட்டணியை சிதைக்க பார்க்கிறார். தான் இல்லாமல் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்ததையும், வேறு கட்சிகளை அவர்கள் கூட்டணியில் சேர்ப்பதையும் அண்ணாமலை விரும்பவில்லை.
உலகத்தில் ஊழலற்ற ஆட்சி என்பது எங்கும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும். அதைக் கூறி ஒரு ஆட்சியை வீழ்த்த முடியாது. ஊழல் மிகப் பெரிய பிரச்சனைதான் அதை விட மேலான பிரச்சனைகள் உள்ளன. ஊழலை விட மதவாத, சாதியவாதம் தீங்கானது. மத வெறி, சாதி வெறி மக்களை சிந்திக்க விடாது. அதைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும்” என்றார் திருமாவளவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT