Published : 13 Jun 2025 03:19 PM
Last Updated : 13 Jun 2025 03:19 PM
தைலாபுரம்: “2026 தேர்தலுக்குப் பிறகு வேண்டும் என்றால், அன்புமணிக்கு தலைவர் பதவியைக் கொடுப்பதாக கூறினேன். ஆனால், நடப்பதை எல்லாம் பார்க்கும்போதும், அவருடைய செயல்பாடுகளை பார்க்கும்போதும், என்னுடைய மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்தப் பதவியை அவருக்கு நான் கொடுக்கமாட்டேன்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில், இன்று (ஜூன் 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நேற்று, 2026 தேர்தலுக்குப் பிறகு வேண்டும் என்றால், அன்புமணிக்கு தலைவர் பதவியைக் கொடுப்பதாக கூறினேன். ஆனால், நடப்பதை எல்லாம் பார்க்கும்போதும், அவருடைய செயல்பாடுகளை பார்க்கும்போது, என்னுடைய மூச்சுக்காற்று அடங்கும் வரை, அந்தப் பதவியை நான் கொடுக்கமாட்டேன்.
நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நான் ஒரு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். ஆனால், நடந்த முடிந்த மாநாட்டின் போதும், மாநாட்டுக்குப் பிறகும் நடக்கின்ற செயல்களைப் பார்க்கும்போது, எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் இந்த கட்சியை கொஞ்சம்கூட தொய்வில்லாமல் நடத்த எனக்கு ஆதரவு வருகிறது.
நேற்று தேர்தலுக்குப் பிறகு, தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுப்பதாக சொன்னதற்கே, நூற்றுக்கு 99 சதவீதம் பேர் ஏன் அவ்வாறு கூறினேன்? என்று கேட்கின்றனர். கடைசிவரை நான்தான் அந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அந்த ஒரு சதவீதத்தை அன்புமணியின் குடும்பத்துக்கு விட்டுவிட்டேன். நான் தவறிகூட தலைவர் பதவியை கொடுக்கிறேன் என்று சொல்லக்கூடாது என்று கட்சியினர் கூறுகின்றனர்.
எனவே, தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கூறுகிறேன், என்னுடைய மூச்சுக்காற்று இருக்கும் வரை பாமக தலைவர் பதவியில் இருப்பேன். நான் கட்சி ஆரம்பிக்கும்போது, எனது குடும்பத்தினர் பதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறியிருந்தேன். ஆனால், அதை காப்பாற்ற முடியவில்லை. தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோருக்கு பதவியை கொடுத்தபோது, அவர்களுடைய செயல்பாடுகள் மனதுக்கு திருப்தியாக இல்லாத நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கையின்படி 35 வயதில் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பொறுப்பை கொடுத்தேன்.” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT