Published : 13 Jun 2025 01:11 PM
Last Updated : 13 Jun 2025 01:11 PM
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில், இந்து மறவர், இந்து வேளாளர், இந்து நாடார் என ஜாதிக்கு முன் ‘இந்து’ என்ற வார்த்தை இடம் பெறும். ஆனால் தற்போது ஆன்லைன் வழியாக பெறப்படும் ஜாதி சான்றிதழ்களில், நேரடியாக ஜாதி பெயர், அது பிற்படுத்தப்பட்ட பிரிவா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவா என மட்டும் குறிப்பிடப்படுகிறது.
‘இந்து’ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் உள்ளன என்பதற்காகவே, அந்த ஜாதிகளுக்கு கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில், ஜாதி பெயருடன் இந்து என்ற வார்த்தை சேர்க்கப்பட்டால் மட்டுமே அவர்கள் இட ஒதுக்கீட்டை பெற முடியும். அப்படியிருக்கும் போது, ஏன் இந்து என்ற பெயரை திமுக அரசு நீக்குகிறது என்பது தெரியவில்லை.
முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய சில சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின, பழங்குடியின இட ஒதுக்கீட்டை வழங்கும் தீய உள்நோக்கத்துடன் இந்த சதி வேலை செய்யப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, சான்றிதழ்களில், ஜாதி பெயருக்கு முன்பு இந்து என்ற வார்த்தையை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புக்கு எதிரான இந்த செயலை திமுக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT