Published : 13 Jun 2025 04:41 AM
Last Updated : 13 Jun 2025 04:41 AM

மாநிலங்களவை தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் தேர்வு: வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுகவின் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை கூடுதல் செயலாளருமான பி.சுப்பிரமணியம் நேற்று வழங்கினார். உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர். | படங்கள்: ம.பிரபு |

சென்னை: மாநிலங்களவை எம்.பி.க்களாக திமுக சார்பில் கமல்ஹாசன், வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் அதிகாரியிடம் இருந்து அவர்கள் வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவின் சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையொட்டி, 6 புதிய எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியம், உதவி தேர்தல் அதிகாரியாக பேரவை செயலக இணை செயலர் கே.ரமேஷ் நியமிக்கப்பட்டனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்கள், அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைக்கும். அந்த வகையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட தனபால், ஐ.எஸ்.இன்பதுரை
ஆகியோர் சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை: தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 10-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெறும் அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து, வெற்றி பெற்றவர்கள் விவரங்களை, தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியம் வெளியிட்டார். அவர் கூறியதாவது:

மொத்தம் 17 மனுக்கள்: திமுகவின் 4 வேட்பாளர்கள் தலா 2 மனுக்கள், அதிமுகவின் 2 வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அக்னி ஆழ்வார், கண்டே சயன்னா, கந்தசாமி, சுப்பிரமணியன், பத்மராஜ், மேஷக் கிருபாகரன், கேபிஎம்.ராஜா ஆகிய 7 பேர் தலா ஒரு மனு என மொத்தம் 17 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்கள் பரிசீலனை கடந்த 10-ம் தேதி நடந்தது. இதில், எம்எல்ஏக்களின் முன்மொழிவு இல்லாததால், சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனு தாக்கல் செய்தவர்கள் யாரும் 12-ம் தேதி (நேற்று) மாலை 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறவில்லை.

நிரப்பப்பட வேண்டிய 6 காலி இடங்கள் எண்ணிக்கையும், சட்டப்படி செல்லத்தக்க வேட்புமனுக்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளன. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், தேர்தல் விதிகளின்படியும், திமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் பி.வில்சன், ராஜாத்தி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மநீம தலைவர் கமல்ஹாசன், அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் போட்டியின்றி முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் அறிவித்தார்.

இதையடுத்து, துணை முதல்வர் உதயநிதி, சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், வெற்றி சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியத்திடம் இருந்து, திமுக வேட்பாளர்கள் 4 பேரும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி முன்னிலையில், வெற்றி சான்றிதழை அதிமுக வேட்பாளர்கள் 2 பேரும் பெற்றுக் கொண்டனர்.

தற்போது எம்.பி.க்களாக உள்ள 6 பேரின் பதவிக் காலம் முடிந்ததும், புதிதாக தேர்வான 6 பேரும் மாநிலங்களவையில் எம்.பி.யாக பதவியேற்றுக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x