Published : 13 Jun 2025 04:28 AM
Last Updated : 13 Jun 2025 04:28 AM
சென்னை: ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில், இன்று முதல் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளும் திமுக சார்பில் கடந்தாண்டே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்கப்பட்டது. இக்குழுவினர், மாவட்ட வாரியாகவும், அணிகள் வாரியாகவும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியது.
தலைமைக்கு பரிந்துரை: அதன்பின், நிர்வாகிகள் நியமனம், மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கட்சித் தலைமைக்கு அளித்தது. அதன்படி, அவ்வபோது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், தமிழகத்தை 7 மண்டலங்களாக பிரித்து, அதற்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, புதிய அணிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஜூன் 2-ம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது,‘‘ ஜூன் முதல் வாரத்தி்ல் இருந்து என்னுடைய பணி என்னவென்றால், கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக ஒன் டூ ஒன் பேசுவோம்’’ என்று அறிவித்தார்.
கருணாநிதி வழியில்... இதையடுத்து, தற்போது நிர்வாகிகள் சந்திப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வழியில், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. . ‘ உடன்பிறப்பே வா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த சந்திப்பானது, இன்று முதல் தொடங்க உள்ளது.
இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை முதல்வர் முதலில் சந்தித்து பேசுகிறார். அதன்பின், அவ்வபோது நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ உள்ளது. குறிப்பாக, வெளிமாவட்ட பயணங்களின் நிகழ்வுகளுக்கு ஏற்ப தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு நிகழும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT