ராமாபுரம் விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை: சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு

ராமாபுரம் விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை: சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு தூண்கள், அதன் இணைப்புப் பாலம் சரிந்து விழுந்ததால் இடிந்தன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் இடிபாடுகளை அகற்றி வருகிறது. மேலும் இடிபாடுகளுக்கான காரணத்தை உறுதிப்படுத்த விசாரணை நடத்தப்படும்.

சம்பவத்தின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்ததை நாங்கள் வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். மேலும் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஒருவர் அமர்ந்திருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை விரைவில் தொடங்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது? - சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது. இவற்றில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகும். இத்தடத்தில் போரூர் முதல் சென்னை வர்த்தகம் மையம் இடையே பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இத்தடத்தில் ராமாபுரம் அருகே உயர்மட்டபாதையில் வியாழக்கிழமை இரவு இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சரிந்த விழுந்த இணைப்பு பாலத்தை அகற்றும் பணி நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in