நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் - சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சேலத்தில் நடந்த அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
சேலத்தில் நடந்த அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
Updated on
2 min read

சேலம்: “விவசாயிகள் இனி, நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 பெறுவார்கள். அதற்கேற்ப சாதாரண ரகத்துக்கு ரூ.131, சன்ன ரகத்துக்கு ரூ.156 என கொள்முதல் விலை இனி உயர்த்தி வழங்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ரூ.1,649 கோடியில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “டெல்டா பாசனத்துக்கு, மேட்டூர் அணையில் இருந்து, 4-வது ஆண்டாக உரிய காலத்தில் நீர் திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

உழவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை கூட்டும் வகையில், நெல் குவிண்டாலுக்கு இனி விவசாயிகள் ரூ.2,500 பெறுவார்கள். அதற்கேற்ப சாதாரண ரகத்துக்கு ரூ.131 ம், சன்ன ரகத்துக்கு ரூ.156ம் என கொள்முதல் விலை இனி உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் சாதாரண ரகம் ரூ.2 ஆயிரத்து 500 எனவும், சன்ன ரகம் ரூ.2 ஆயிரத்து 545 எனவும் கொள்முதல் செய்யப்படும். இதனால், 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவர்,” என்று கூறினார்.

மாணவி ராஜேஸ்வரிக்கு வீடு: முதல்வர் ஸ்டாலின், ஐஐடி சேர்க்கைக்கான, ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்ற சேலம் மாவட்டம் கருமந்துரை மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரியை, விழா மேடையில் பாராட்டி, அவருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வீடு, ரூ.70 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் ஆகியவற்றை வழங்கினார். மாணவியின் உயர்கல்விக்கான செலவினை, தமிழக அரசு ஏற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வரவேற்றார். அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மேயர் ராமச்சந்திரன், எம்.பி-க்கள் செல்வகணபதி, மலையரசன், மாதேஸ்வரன், மணி, முன்னாள் எம்எல்ஏ, சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரோடு ஷோ: முன்னதாக, மேட்டூர் அணையில் இருந்து சேலம் வரும் வழியில் திமுக சார்பில் ஆங்காங்கே வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓமலூரில், சாலை சந்திப்பு பகுதியில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு இடையே சுமார் 1 கிமீ., நடந்து, ரோடு ஷோ வந்த முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களுடன் கை குலுக்கியதுடன், அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மேலும், பெரியார் பல்கலைக் கழக வளாகத்துக்குள் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, துணைவேந்தர் பொறுப்புக்குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பெரியாரின் திருவுருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது, பல்கலைக் கழக மாணவிகளிடம் அவர் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in