Last Updated : 12 Jun, 2025 03:33 PM

7  

Published : 12 Jun 2025 03:33 PM
Last Updated : 12 Jun 2025 03:33 PM

டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் 

சேலத்தில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்

சேலம்: “டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ரூ.1,649 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது, மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு மடைமாற்றம் செய்து விட்டதாக ஆட்சியை குறை சொல்லி, விமர்சனம் செய்துள்ளார். அதனால் இந்த கூட்டத்தில் அரசியல் பேச வேண்டிய கட்டாயத்தில் பேசுகிறேன்.

குடிநீர் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி போதாததால், தமிழக அரசு 50 சதவீத நிதியை கூடுதலாக ஒதுக்கி அந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில் எந்த அடிப்படையில் மடைமாற்றம் என்று குறை சொல்கிறார். தமிழகத்துக்கு மத்திய அரசு இதுவரை எந்த சிறப்புத் திட்டங்களையும் அறிவிக்கவில்லை, நிதியும் கொடுக்கவில்லை. மதுரையில் 10 பத்து ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அது என்ன மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? என்று நேரில் சென்று அமித்ஷா பார்த்தாரா?.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில், கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம், என பல திட்டங்களை செய்துள்ளோம். பாஜக அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்துக்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்?. அதேபோல் மத்திய அமைச்சர் ஷெகாவத், கீழடி அறிவியல் ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று சொல்கிறார்.

தமிழகத்தில் இரும்பின் தொன்மையை ஆய்ந்து தமிழக அரசு அறிக்கையை வெளியிட்டது. அதை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, அங்கீகரிக்கவாவது செய்தீர்களா?. தமிழகத்தின் தொன்மையையும் பண்பாட்டையும் அழிக்க தான் மத்திய அரசு முயற்சிக்கிறது. இதையெல்லாம் தட்டி கேட்க எதிர்க்கட்சித் தலைவருக்கு துணிவு இல்லை. மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்.

தமிழகத்தையும் தமிழர் பண்பாட்டையும் அழிக்க நினைக்கும் இந்த கூட்டணியை அதனால்தான் தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள், தொடர்ந்து புறக்கணிப்பார்கள். பதவியை காப்பாற்றிக் கொள்ள வெளிப்படையாக அன்று கூட்டணி வைத்திருந்தார். ஆனால் எந்த திட்டங்களையாவது அவர் தமிழகத்துக்கு கொண்டு வந்தாரா?. தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறுகிறார்.

ஆனால்,சுயநலத்துக்காக சொந்த கட்சியை அடமானம் வைத்த பழனிசாமி வாய் பேசாமல் மவுனமாக இருக்கிறார். மக்கள் ஏமாற மாட்டார்கள். தமிழக மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள். டெல்லியில் இருந்து வருபவர்களை தமிழகத்தை ஆள ஒருபோதும் விட மாட்டோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். இவ்விழாவில் அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x