அதிமுக வாக்குறுதி கடிதத்தை அரசியல் நாகரிகம் கருதி வெளியிடவில்லை: பிரேமலதா விளக்கம்

அதிமுக வாக்குறுதி கடிதத்தை அரசியல் நாகரிகம் கருதி வெளியிடவில்லை: பிரேமலதா விளக்கம்
Updated on
1 min read

சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்குகிறோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வழங்கிய கடிதத்தை அரசியல் நாகரிகம் கருதி வெளியிடவில்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி தேமுதிக மண்டல பொறுப்பாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று ஆலோசனை நடத்தினார். முதல்நாளில் தென்மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் தேர்தல் கூட்டணி நிலவரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். தொடர்ந்து ஜூன் 16, 17-ம் தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் நானும், விஜயபிரபாகரனும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறோம். கட்சியின் மாநாடு ஜன.9-ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ளது. அதன்பிறகு தேர்தல் பணிகள் வேகமாக நடக்கும். தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்று தற்போது கூறமுடியாது. தேமுதிக தங்கள் கூட்டணியில் இருப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம். 2026-ல் மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்பதையும் அறிவித்துள்ளனர்.

முன்னரே மாநிலங்களவை இடம் வழங்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் கையெழுத்து போட்டு கடிதம் கொடுத்தார். பிறகு அவர் மறுத்தபோது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து அதிமுக தரப்பில் இருந்து மூத்த நிர்வாகிகள் எங்களிடம் தொலைபேசி வாயிலாக பேசி வேறு ஏதோ பதட்டத்தில் பேசிவிட்டார் என்று தெரிவித்தனர். ஆனால், அரசியல் நாகரிகம் கருதி பழனிசாமி கையெழுத்து போட்ட அந்த கடிதத்தை நாங்கள் வெளியிடவில்லை.

தற்போது எங்கள் கட்சியின் வளர்ச்சி பணிகளை மட்டும்தான் அடுத்த 6 மாதங்கள் கவனிக்க உள்ளோம். கூட்டணி ஆட்சி வரவேற்கக்கூடிய விஷயம்தான். அதிகாரம் பகிரப்பட்டால் மக்களுக்கு நல்லது நடக்கும். தவெக உடன் கூட்டணி குறித்து விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in