

சென்னை: உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் 50 சதவீதத்தை முழுமையாக மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநில ஒதுக்கீட்டின்கீழ் தமிழகத்தின் உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்த ஒரு முக்கியமான பிரச்சினையை தங்களது அவசர கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தமிழகத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில், உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்கள் தமிழகத்தில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீட் எஸ்.எஸ். தேர்வில் மாநில இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து 29-ம் தேதி தமிழக தேர்வுக் குழு, பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்ய அனுமதிக்கும் வகையில், 2-வது மாநில சுற்று அட்டவணையை குறிப்பிடுமாறு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தை (டிஜிஎச்எஸ் - DGHS) முறையாக கேட்டுக்கொள்ளப்பட்டது.
நீட் எஸ்.எஸ், மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வின் 2-வது சுற்றில் மாநில அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்ய, விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன.
ஆனால், மாநில அளவில் கட்டாய இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடத்தாமல், நிரப்பப்படாத பணியிடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்றுவது, தமிழகத்தில் அரசு பணியில் உள்ள மருத்துவர்கள், அவர்கள் விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்யவோ அல்லது மேற்கொண்டு கலந்தாய்வில் பங்கேற்கவோ, அவர்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். இது உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு முரணானதாகும்.
எனவே, மாநில ஒதுக்கீட்டின்கீழ், தமிழகத்தில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து 50 சதவீத இடங்களும் தக்கவைக்கப்பட்டு, மாநில அளவிலான நீட் எஸ்.எஸ் கலந்தாய்வின் 2-வது சுற்றில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய வேண்டும். இந்த பொருட்பாட்டில் தங்களது ஒத்துழைப்பையும், ஆதரவையும் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.