

சென்னை: வழக்கறிஞர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளுக்கான நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளராக எஸ்.அறிவழகன் மற்றும் 10 மண்டலங்களுக்கான பொறுப்பாளர்கள், சட்ட ஆலோசனை அணி ஒருங்கிணைப்பாளராக எஸ்.குமரேசன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதேபோல, தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், சமூக ஊடக அணிகளுக்கான இணை ஒருங்கிணைப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், பிற மாநில, நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணிகளில் மேலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். ‘tvkhqitwingoffl ’ என்பதே தவெக தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கு முகவரியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.