Last Updated : 11 Jun, 2025 07:29 PM

 

Published : 11 Jun 2025 07:29 PM
Last Updated : 11 Jun 2025 07:29 PM

‘பாமக பதவியில் கே.பாலு தொடர்வார்’ - ராமதாஸ் நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம்

ராமதாஸ் | பாலு

சென்னை: பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவராக வழக்கறிஞர் கே.பாலு தொடர்வார் எனவும், புரவலராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்படுவதாகவும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று (ஜூன் 11) புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. பேரவையின் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்1 : வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவராக வழக்கறிஞர் கே.பாலு தொடர்வார் - புதிய நிர்வாகிகள் நியமனம். சமூக நீதிக் காவலர் ராமதாஸை நிறுவனராகக் கொண்டு 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தமிழ்நாட்டில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் கடந்த 22 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தொடங்கப்பட்ட நாள் முதலாகவே, பேரவையின் அறங்காவலர்கள் குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் கே.பாலு தலைமையில் சமூக நீதிக்காக எண்ணற்ற பணிகளை பேரவை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்தது, தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் உள்பட நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 90 ஆயிரத்துக்கும் கூடுதலான மதுக்கடைகளை மூடியது, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தியது. 2013-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் இன்றைய தலைவர் அன்புமணி ராமதாஸ், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்பட 10,000-க்கும் மேற்பட்ட பாட்டாளி சொந்தங்கள் குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட போது அவர்களை சட்டப் போராட்டம் நடத்தி மீட்டது,

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக போராடியது என வழக்கறிஞர் கே.பாலு தலைமையில் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை படைத்த சாதனைகளை எண்ணி இந்த செயற்குழு பெருமிதம் கொள்கிறது. இப்பணிகளுக்காக பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலுவை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பலமுறை பாராட்டியதுடன், பாராட்டு விழாக்களையும் நடத்தியதை இந்த சிறப்பு செயற்குழுக் கூட்டம் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறது.

அறக்கட்டளைகள் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் பதிவு ஆவணத்தின் விதி எண் 17(e)இன்படி பேரவையின் தலைவரையும், விதி எண் 17(f)இன்படி பிற நிர்வாகிகளையும் நியமிக்க முடியும். தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை ஏதேனும் காரணத்திற்காக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றால், 17(g)இன்படி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் பேரவையின் அறங்காவலர்கள் குழு கூடித் தான் தீர்மானிக்க முடியும். வேறு எந்த வழிகளிலும் பேரவையின் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியாது.

அந்த வகையில் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவராக அறங்காவலர்கள் குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் கே.பாலு அறங்காவலர்கள் குழுவின் பதவிக்காலம் முடியும் வரை அப்பொறுப்பில் தொடர்வார் என்று வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது. அத்துடன் பேரவையின் நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்களை செயற்குழு தேர்வு செய்கிறது.

1. மாநில செயலாளர்: வழக்கறிஞர் கே. சரவணன்
2. மாநில பொருளாளர்: வழக்கறிஞர் டி. தமிழரசன்
3. மாநில அமைப்புச் செயலாளர்: வழக்கறிஞர் கே.ஐ. பழனிச்சாமி
4. மாநில சமூக ஊடகப் பிரிவு செயலாளர்: வழக்கறிஞர் கணல் கோ. கதிரவன்
5. சென்னை மண்டல செயலாளர்: வழக்கறிஞர் பா. குமார்
6. கிழக்கு மண்டல செயலாளர்: வழக்கறிஞர் என்.ஆர். வெங்கடேசன்
7. மேற்கு மண்டல செயலாளர்: வழக்கறிஞர் எம். மகாலிங்கம்
8. மத்திய மண்டல செயலாளர்: வழக்கறிஞர் ஏ. பாலமூர்த்தி
9. வடக்கு மண்டல செயலாளர்: வழக்கறிஞர் கே. சக்கரபாணி
10. தெற்கு மண்டல செயலாளர்: வழக்கறிஞர் என். சிவக்குமார்
11. மாநில மகளிரணித் தலைவர்: வழக்கறிஞர் நா. நவமணி

பேரவையின் தலைவர் பதவியில் தொடரும் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களின் பணி சிறக்க இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2 : வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஒருமனதாக தேர்வு: வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் நிலையில், அது மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று இந்தச் செயற்குழு கருதுகிறது. அதற்காக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவைக்கு வழிகாட்டும் வகையில் பேரவையின் புரவலராக செயல்படும்படி அன்புமணி ராமதாஸ் அவர்களை வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை கேட்டுக் கொள்கிறது’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னையில் அன்புமணி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற சமூக நீதி பேரவை மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலுவை, பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். அவருக்கு மாற்றாக வழக்கறிஞர் கோபு என்பவரை நியமித்துள்ளார். இதேபோல, 20-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்களையும் நீக்கிவிட்டு, புதியவர்களை ராமதாஸ் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x