அண்ணாமலைக்கு அண்ணா பல்கலை. முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி வழக்கறிஞர் நோட்டீஸ்! 

அண்ணாமலை | கோப்புப்படம்
அண்ணாமலை | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட அண்ணாமலை, குற்றவாளி ஞானசேகருக்கு அந்தப் பகுதியில் வசித்து வரும் கோட்டூர் சண்முகம் என்பவருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், கோட்டூர் சண்முகம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜனின் நெருங்கிய நண்பர் என குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற காலத்தில், ஞானசேகரன் கோட்டூர் சண்முகத்திடம் பேசியதாகவும் கோட்டூர் சண்முகம் நடராஜனிடம் பேசி சிசிடிவி ஆதாரங்களை அழித்ததாகவும் பேட்டி அளித்திருந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட தன்னை குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் தனக்கு 50 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நடராஜன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், “கோட்டூர் சண்முகம் தன் நீண்ட கால குடும்ப நண்பர் எனவும் அவருடன் தான் தொலைபேசியில் பேசியதை வைத்து தன்னை இந்த குற்றத்தில் தொடர்புபடுத்தி பேசியதால் அண்ணாமலை தன்னுடைய சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும்,” எனவும் அவர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in