“பாஜகவுடன் இபிஎஸ் கடைசி வரை கூட்டணியில் இருப்பது கேள்விக்குறியே” - அப்பாவு கருத்து

தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு | கோப்புப் படம்
தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு | கோப்புப் படம்
Updated on
2 min read

திருநெல்வேலி: “தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சுயமாக சிந்திக்க கூடியவர். பாஜகவுடன் தற்போது கூட்டணி சேர்ந்துள்ள அவர், கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா என்பதே கேள்விகுறி” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.

பாளையங்கோட்டையில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முறையை வங்கிகளோடு இணைக்கும் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. பொத்தாம் பொதுவாக ரூ.10 லட்சம் கோடி தந்தோம், ரூ.20 லட்சம் கோடியை தமிழகத்துக்கு தந்ததோம் என்று மத்திய அரசு சொல்கிறதே தவிர, எந்த திட்டத்துக்குகு நிதி ஒதுக்கி உள்ளது என சொல்ல மாட்டார்கள்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பிப்பதற்கு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்துக்கு ரயில்வே திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.701 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சென்னையில் 2-வது மெட்ரோ ரயில் திட்டத்தை உள்துறை அமைச்சர் நேரடியாக வந்து, பழனிசாமி முதல்வராக இருக்கும்போது ஆரம்பித்தார்கள். ஆனால், அந்த திட்டத்துக்கு எந்தவிதமான நிதியும் இதுவரை கொடுக்கவில்லை.

ஆனால், ரூ.63 ஆயிரம் கோடி நிதி கொடுத்துள்ளதாக பாஜக பொய் சொல்கிறது. மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே நிதி கொடுத்துள்ளது. மாநில அரசு மீதி பணம் கடனாக பெறப்பட்டு உள்ளது. கடனை திரும்ப செலுத்துவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு தமிழக அரசுதான் என ஒப்பந்தம் போட்டுள்ளது. ரூ.7 ஆயிரம் கோடியை கொடுத்துவிட்டு ரூ.63 ஆயிரம் கோடி கொடுத்ததாக சொல்வதில் என்ன நியாயம் உள்ளது? தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை கடந்த 4 ஆண்டுகளாக தரவில்லை. குறிப்பாக கல்வித் துறைக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என சொல்கிறது. அந்த அரசியல் அமைப்பு சட்டப்படிதான் இருக்க வேண்டும். ஆனால் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் அரசியலமைப்பு சட்டத்தை குப்பையில் தூக்கி போட்டு விட்டார்கள். தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக கொதித்தெழுந்தது தமிழகம் மட்டும் தான். ஒருபோதும் புதிய கல்வி கொள்கையை அனுமதிக்க மாட்டேன் என முதல்வர் சொல்கிறார். மீண்டும் தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சி அமைக்க வேண்டும் என அனைத்து கிராமத்தில் உள்ள பெண்களும் நினைக்கிறார்கள். 234 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தமிழக முதல்வர் சொல்லும் வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.

பாஜகவுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா என்பதே கேள்விகுறி. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை வைத்துக் கொண்டுதான் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வரப்போகிறது என்பதை அமித் ஷா சொன்னார். பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து வர செய்தும் அதையே தான் சொன்னார்.

எதிர்க்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்க கூடியவர். அவர் நல்ல முடிவை எடுப்பார். பாஜகவிடம் ஒரு முடிவு தெளிவாக இருக்காது. எதை கேட்டாலும் டெல்லியில் முடிவு செய்வார்கள் என்று தான் சொல்லிவிடுவார்கள்” என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in