Last Updated : 11 Jun, 2025 03:58 PM

 

Published : 11 Jun 2025 03:58 PM
Last Updated : 11 Jun 2025 03:58 PM

“மழைக் காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்துறை செயல்படும்” - அமைச்சர் சிவசங்கர் 

ஜெயங்கொண்டம் கோட்டம் புதிய செயற்பொறியாளர் அலுவலகத்தை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்

அரியலூர்: “தமிழகத்தில் இப்போது பருவமழை முன்கூட்டியே துவங்கி இருக்கிற சூழலில் தமிழக முதல்வர் அனைத்து பணிகளுக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் எல்லா வகையிலும் மின்துறை செயல்படும்,” என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் கோட்டம் புதிய செயற்பொறியாளர் அலுவலக திறப்பு விழா இன்று (ஜூன் 11) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய செயற்பொறியாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: “பெரம்பலூர் மின்பகிர்மான வட்டத்துக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் மின் நுகர்வோர்களின் குறைகளை உடனுக்குடன், நிவர்த்தி செய்யவும், தடையில்லா தரமான மின்சாரத்தை வழங்கிடவும். ஒரே கோட்டமாக செயல்பட்டு வந்த அரியலூர் கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய ஜெயங்கொண்டம் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய கோட்டத்தின் கீழ் உதவி செயற்பொறியாளர் நகரம் ஜெயங்கொண்டம், உதவி செயற்பொறியாளர் கிராமப்புரம் ஜெயங்கொண்டம் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆண்டிமடம் ஆகிய உபகோட்டங்கள் மற்றும் நகர் ஜெயங்கொண்டம், வடக்கு ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், சுத்தமல்லி, தா.பழூர், மீன்சுருட்டி, வடக்கு ஆண்டிமடம், தெற்கு ஆண்டிமடம், பாப்பாகுடி, பெரியாத்துக்குறிச்சி ஆகிய 10 பிரிவு அலுவலகங்கள் செயல்படும்.

மேலும் 10 எண்ணிக்கையிலான துணை மின் நிலையங்கள் ஜெயங்கொண்டம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும். இதுவரையில், ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள், மின்சாரம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை அரியலூரில் உள்ள செயற்பொறியாளரை அணுகி நிவர்த்தி செய்து வந்தனர்.

இனி புதிய கோட்ட அலுவலகம் ஜெயங்கொண்டத்திலேயே துவக்கப்பட்டதால், மேற்கண்ட பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட சுமார் 1,38,000 மின் நுகர்வோர்கள் தங்களது மின்சாரம் தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக்கொள்ளவும். மின் நுகர்வோர்களுக்கு தரமான தடையில்லா மின்சாரத்தினை விரைந்து வழங்கிடவும், சிறந்த நுகர்வோர் சேவை வழங்கிட பயனுள்ளதாக அமையும் வகையில் புதிய மின்வாரிய கோட்ட அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சாரம் தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கோடையில் எதிர்பாராத விதமாக கோடைமழை அதிகமாக இருந்தது. சுழல்காற்றும் வீசுகின்ற புதிய நிலை இருந்தது. இதன் காரணமாக பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்வதும் அதனால் மின்சாரம் தடைபடுவதுமாக இருந்தாலும் உடனடியாக மின்துறை ஊழியர்களின் துரிதமான செயல்பட்டால் அனைத்து இடங்களிலும் 24 மணி நேரத்துக்குள் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இதேபோன்ற நிலை திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டது. அதன் பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 500 மின் கம்பங்கள் சாய்ந்தன. அங்கு 2 நாட்களில் மீண்டும் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. இது தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது பருவமழையும் முன்கூட்டியே துவங்கி இருக்கிற சூழலில் தமிழக முதல்வர் அனைத்து பணிகளுக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் எல்லா வகையிலும் இத்துறை செயல்படும்,” என்றார்.நிகழ்ச்சியில் திருச்சி தலைமை பொறியாளர் கீதா, மேற்பார்வை பொறியாளர் பெரம்பலூர் மேகலா, ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், கோட்டாட்சியர் ஷீஜா, செயற்பொறியாளர் அய்யனார், வட்டாட்சியர் சம்பத்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x